சீ பீல்ட் கோவில் பக்கதர்களுக்கிடையில் வன்மையான கைகலப்பு

 

யுஎஸ்ஜே 25, சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலையில் பக்தர்களுக்கிடையில் வன்மையான கைகலப்பு வெடித்தது.

இச்சண்டை இரு தரப்பினருக்கும் இடையிலான தவிரான புரிந்துணர்வினால் ஏற்பட்டது என்று சுபாங் ஜெயா போலீஸ் கூறிற்று.

இச்சம்பவத்திற்கு காரணம் கோவில் இடமாற்றம் குறித்த பிரச்சனையில் இவ்விரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தவறான புரிந்துணர்வு என்று மாவட்ட போலீஸ் இலாகா அதன் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கையில் இறங்கியது என்றும் அது கூறுகிறது.

“சட்டத்திற்கு எதிரான எதையும் செய்ய வேண்டாம் என்று சுபாங் ஜெயா போலீஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சூழ்நிலை கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது”, என்று அது கூறிற்று.

சமூக ஊடக வீடியோக்கள் இக்கைகலப்பில் அதிகமானவர்கள் சம்பந்தப்பட்டிறிப்பதைக் காட்டுகின்றன. ஆத்திரமடைந்த கூட்டத்தினர் ஒரு லாரியைக் கவிழ்த்துப் போட்டனர்.

சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் படையினர் இருப்பதையும் ஒரு பதிவேற்றம் காட்டுகிறது.

கோவில் உடைக்கப்படுவதைத் தடுப்பதற்காக பக்கதர்கள் அங்கு திரண்டாகக் கூறப்படுகிறது.

இக்கோவில் நவம்பர் 22 இல் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக இருந்தது. கோவில் இருந்த நிலத்தை ஒன் சிட்டி மேம்பாட்டு நிறுவனம் வாங்கிய பின்னர் கோவிலை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் 2007 லிருந்து தொடர்கிறது.

2014 இல், இக்கோவிலை மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுல்ள ஓர் இடத்திற்கு மாற்றுவதற்கான இணக்க அடிப்படையிலான நீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த இணக்கத்தைத் தொடர்ந்து ஒன் சிட்டி ரிம1.5 மில்லியன் நன்கொடையும் அளித்தது.

இருப்பினும், பக்தர்கள் கோவிலை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 1891 ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் இக்கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.