உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைத்து வருகிறது. அழைத்தவர் போலீஸ் நிலையத்திலிருந்து அழைப்பதாக கூறுகிறார். கலவரம் அடையாதீர்கள், பயம் கொள்ளாதீர்கள்.
இதுதான் கூட்டரசு போலீஸ் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குனர்(சைபர் குற்றம், பல்லூடகப் புலன் விசாரணை) எஸ்ஏசி அஹ்மட் நூர்டின் இஸ்மாயில் பொதுமக்களுக்குக் கூறும் அறிவுரை.
அப்படிப்பட்ட வேளைகளில் அழைத்தவரின் முழுப் பெயர், அவர் பணிபுரியும் போலீஸ் நிலையம், அடையாள எண், அவரின் மேலதிகாரியின் பெயர் போன்ற விவரங்களைக் கேட்கும் உரிமை அழைக்கப்பட்டவருக்கு உண்டு.
இப்படி அழைத்தவரைக் கேள்விகளால் துளைத்தெடுப்பது “தொலைத்தொடர்பு ஏமாற்று வேலைகளில்” ஈடுபடும் கும்பல்களிடமிருந்து நீங்கள் தப்பிக்க உதவும். இதுவே “மக்காவ் மோசடி” என்றும் அழைக்கப்படுகிறது. நாங்கள் போலீஸ், சுங்கத் துறை, பேங்க் நெகாரா அல்லது வருமான வரி வாரிய அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வதே இந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் வாடிக்கையாகும்.
சில வேளைகளில் நீதிமன்றத்திலிருந்து அழைப்பதாக அல்லது தனியார் நிதிக் கழகங்களிலிருந்து அழைப்பதாகக் கூறுவார்கள். கடன் கட்டப்படவில்லை, நீதிமன்ற அழைப்பாணை (சம்மன்கள்) இருக்கின்றன, இறக்குமதி செய்த பொருள்களுக்கு வரி கட்டவில்லை என்று சொல்லிப் பயமுறுத்துவார்கள்.
“மக்களும் எளிதில் ஏமாறக் கூடியவர்களாக உள்ளனர். போலீஸ் நிலையத்திலிருந்து அழைப்பதாகக் கூறியதும் உடனே நம்பி விடுகிறார்கள்”, என்று அஹமட் நூர்டின் ஆர்டிஎம் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
தங்களுக்கு ஒரு பிரச்னை என்று கூறப்பட்டதும் அதைக் கேட்டவர் உடனடியாக அதைக் களைவதற்கு முற்படுகிறார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் மோசடிக்காரர்கள் ஒரு வங்கிக் கணக்கில் பணம் போடுமாறு கூறுவார்கள். அப்படியே, அந்த அப்பாவியின் நிதி நிலவரம், வங்கிக் கணக்கு முதலியவற்றையும் தெரிந்து கொள்வார்கள். உள்ள பணம் மொத்தத்தையும் சுருட்டிக் கொள்வார்கள்.
இப்படிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்தால் மக்கள் பயந்து விடக்கூடாது என்று அஹ்மட் நூர்டின் அறிவுறுத்தினார். மாறாக, அழைத்தவரின் விவரங்களைக் கேட்டு நெருக்க வேண்டும். இப்படித் திருப்பி அடித்தால் அழைத்தவர் பின்வாங்குவார், திரும்பவும் அழைக்க மாட்டார் என்றாரவர்.