1எம்டிபி கணக்காய்வு அறிக்கையில் மாற்றங்கள் செய்தது சம்பந்தமாக நஜிப் மீது நடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கிட் சியாங்

1எம்டிபி மீதான தேசிய கணக்கு ஆய்வு இலாகாவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு சட்டவிரோதமான மாற்றங்கள் செய்ததற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது நாடாளுமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு தேசிய கணக்கு ஆய்வு அறிக்கையின் சில பாகங்களை அகற்ற வேண்டும் அல்லது மறு ஆய்வு செய்து திருத்த வேண்டும் என்று நஜிப்பும் மற்றவர்களும் உத்தரவிட்டதாக தேசிய தலைமைக் கணக்காய்வாளர் மதினா முகமட் கூறியதைத் தொடர்ந்து கிட் சியாங் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

வெளிப்படுத்தப்பட்டுள்ள இத்தகவல் மிக அதிர்ச்சி அளிப்பதும் ஒட்டுமொத்த அதிகார அத்துமீறலும் ஆகும். இது நாடாளுமன்ற நேர்மையின் அடிப்படையையே தாக்குவதாகும் என்று கூறிய கிட் சியாங், இதை அனைத்து மலேசியர்களும், குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், கடுமையானதாகக் கருத வேண்டும் என்றார்.

1எம்டிபி மீதான முன்னாள் தேசிய கணக்காய்வாளரின் கணக்காய்வு அறிக்கையில் நஜிப் சட்டவிரோதமான மாற்றங்கள் செய்துள்ளது நிருபிக்கப்பட்டால், நஜிப்புக்கு என்ன தண்டனை அளிக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றத்திற்கு பரிந்துரை செய்வது சலுகைகள் குழுவின் பொறுப்பாகும் என்று கிட் சியாங் நேற்று கூறினார்.