‘ஊடுருவல்காரர்கள் ஆலயத் தலைவரையும் மேலும் நால்வரையும் கத்தியைக் காண்பித்து மிரட்டினர்’

சுபாங் ஜெயா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தைத் தாக்கிய கும்பல் ஆலயத் தலைவரையும் நிர்வாகக் குழு உறுப்பினர் சிலரையும் பிணை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டினார்களாம்.

இதைத் தெரிவித்த ஆலயப் பேச்சாளர் இளங்கோவன் அண்ணாமலை, தாக்குதலில் ஈடுபட்டவர்கள்   சுமார் 200 பேர் இருக்கலாம் என்று மலேசியாகினியிடம் கூறினார். போலீஸ் சுமார் 50 பேர் என்று மதிப்பிட்டிருந்தனர்.

“பின்னிரவு சுமார் 2.30க்கு அச்சம்பவம் நிகழ்ந்தது. ஊடுருவல்காரர்கள் ஆலய வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பக்தர்களைத் தாக்கினர்.

“நிலம் மேம்பாட்டாளருக்குச் சொந்தமானது  அதிலிருந்து வெளியேறு என்றும் சத்தமிட்டனர்.

“ஐந்து ஆலய நிர்வாகக் குழு உறுப்பினர்களைப் பிணை பிடித்து வைத்துக் கொண்டார்கள், அவர்களில் ஆலயத் தலைவர் ராமாஜியும் ஒருவர். அவர் கழுத்தில் வெட்டுக்கத்தியை(பாராங்) வைத்து மிரட்டினர்”, என்றார் இளங்கோவன்.

போலீஸ் அதிகாலை மணி 4.30க்குத்தான் வந்ததாக அப்பேச்சாளர் கூறினார். வந்து ஒன்றும் செய்யவில்லை. பக்தர்கள் அடங்கிய குழு ஒன்று ஊடுருவல்காரர்களை விரட்ட முற்பட்டபோதுதான் அவர்கள் நடவடிக்கையில் இறங்கினர்.

“போலீஸ் நடவடிக்கை எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. அவர்கள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. இதற்குக் காணொளி ஆதாரம் இருக்கிறது”, என்றாரவர்.

அது இரண்டு இந்தியர் கும்பல்களுக்கிடையிலான கைகலப்பு என்று கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.

ஊடுருவல்காரர்களில் பலர் அவர்களின் உடைமைப்பொருள்களை விட்டுச் சென்றுள்ளனர். அவற்றை வைத்து அந்தக் கூட்டத்தில் பல இனத்தவரும் இருந்தனர் என்பதைத் தம்மால் நிரூபிக்க முடியும் என்றார்.

அச்சம்பவத்தில் இருவர் கடுமையாகக் காயமடைந்தனர். 18 வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.

இரு கூட்டத்தாரிடையே ஏற்பட்ட தப்பான புரிதல்தான் வன்முறைக்கு இட்டுச் சென்றதாக போலீஸ் தொடக்கத்தில் கூறியிருந்தது. பின்னர் அவர்கள் தாக்குதல்காரர்களை அடையாளம் கண்டு பிடித்து விட்டதாகக் கூறினர்.

ஆலயத்துக்குச் சேதம் சொற்பமே என்றவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் ஆயுதங்களைக் கண்டெடுத்ததாகவும் அவர்கள் சொன்னார்கள்.