சீபீல்ட் ஆலய வன்முறையை புக்கிட் அமான் விசாரிக்க வேண்டும் –  அமைச்சர்கள் கோரிக்கை!

இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் சுமார் 50 நபர்கள் சீ பீல்ட்  ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன்  ஆலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பக்தர்களை இரும்புத்தடியாலும் பாராங் கத்தியாலும் தாக்கியுள்ளனர்.

இந்தியச் சமூகத்தின் அமைச்சர்களும், துணையமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்ட மன்ற உறுப்பினர்களும் இந்த அசம்பாவிதத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்தனர்.

இது சார்பாக இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன், நீர் நில இயற்கைவளத்துறை அமைச்சர் சேவியர் ஜெயக்குமார், தொடர்பு பல்லூடகத் துறை அமைச்சர் கோபிந் சிங், பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி, புறநகர் மேம்பாட்டுத்துறை துணையமைச்சர் சிவராசா ஆகியோர் உட்பட இதர இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்று காலை நடந்த இந்த வன்முறை சம்பவத்தை முறையாக கையாளத் தவறிய சுபாங்ஜெயா காவல் நிலைய அதிகாரிகளை சாடிய அமைச்சர்கள், காவல்துறையினரின் ஈடுபாடு ஒருதலைப்பட்சமாக அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

அசம்பாவிதம் சார்பாக தகவல் கிடைத்த பிறகு ஒரே ஒரு காவல்துறை வாகனம் மட்டுமே  காலை மணி 4.15 க்கு கோயில் வளாகத்திற்குள் வந்தது. அடுத்தபடியாக கலகத்தடுப்பு காவல்துறை வாகனம் (FRU) காலை 6 மணிக்குத்தான் வந்தது.

மேலும், காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், “இரண்டு குழுக்களுக்கு இடையே உண்டான கோயில் இடமாற்றத்தில் ஏற்பட்ட புரிந்துணர்வற்ற சூழலே இந்நிகழ்விற்கு காரணம்” என்று கூறியிருந்தனர். இது பொய்யாகும்.

இக்கூற்றை கண்டித்த அமைச்சர்கள் இது சார்பான முழு விசாரணையைக் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும், இவ்விசாரணையை புக்கிட் அமான் தலைமை காவல் நிலையம் நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் சுபாங்ஜெயா காவல் துறையினரை ஈடுபடுத்தக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர்.

இது சம்மந்தப்பட்ட வன்முறையாளர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு அவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.