முன்னாள் அமைச்சர் மாட்ஸிர் குற்றம் சாட்டப்படவிருக்கிறார்

 

முன்னாள் கல்வி அமைச்சர் மாட்ஸிர் காலிட் மீது எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் ஊழல் குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் இன்னொருவரும் குற்றம் சாட்டப்படுவார்.

அம்னோ உதவித் தலைவரான அவர் வியாழக்கிழமையன்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைமையகத்திற்கு அழைக்கப்படுவார் என்று ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியது.

சரவாக்கில் பள்ளிகளுக்கான சூரிய மின் உற்பத்தி திட்டம் சம்பந்தமாக குற்றம் சாட்டப்படுவார் என்று நம்பப்படுகிறது.

அக்டோபர் 16-இல், மாட்ஸிர் எம்எசிசியால் ஐந்து மணி நேரத்திற்கு விசாரிக்கப்பட்டார் என்று கடந்த மாதம் பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

தமக்கு முன் பதவியிலிருந்தவரின் “பல எலும்புகள்” வெளிப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் இம்மாத முற்பகுதியில் கூறியிருந்தார்.

நவம்பர் 15 இல், முன்னாள் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் மற்று அவரது முன்னாள் உதவியாளர் ரிஸால் மன்சோர் ஆகிய இருவரும் இதே திட்டம் பற்றிய ஊழல்களுக்காக தனித்தனியாக கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

கடந்த மாதம், 45 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடியை அடுத்து மாட்ஸிர் குற்றம் சாட்டப்படும் இரண்டாவது மூத்த அம்னோ தலைவராவார்.