அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, சுபாங் ஜெயா யுஎஸ்ஜே 25, ஸ்ரீமகாமாரியம்மன் ஆலய அருகில் வன்முறை தலையெடுக்க காரணம் ஒற்றுமை அமைச்சர் பி.வேதமூர்த்தியே என்று சாடினார்.
“இந்த விவகாரத்தில் யாரும் தன்னைக் குறிப்பிட்ட ஒரு சமயத்தைக் கட்டிக்காக்கும் ஹீரோவாக நினைத்துக் கொண்டு செயல்படக்கூடாது. மேலும், ஒற்றுமையை வளர்க்க வேண்டிய அமைச்சை வைத்துக்கொண்டிருப்பவர்.
“அந்தப் பொறுப்பில் இருந்துகொண்டு அந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களோ மற்ற சமயத்தவரோ ஆத்திரங்கொள்ளுமாறு நடந்து கொள்ளக் கூடாது”, என ஜாஹிட் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாட்டில் சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதும் சட்ட ஆளுமையை மதிப்பதும் அவசியம் என்றார்.
ஜாஹிட் அவரது பேச்சில் வேதமூர்த்தி என்ற பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. விளக்கம் பெற மேலும் கேள்விகள் கேட்கப்பட்டபோது அவற்றுக்குப் பதிலளிக்கவும் அவர் தயாராக இல்லை.
ஆலயக் கலவரம் தொடர்பாக போலீசைக் குறைகூறிய வேதமூர்த்தி சில தரப்பினரின் கண்டனத்துக்கு ஆளானார்.
அதேபோல் ஆலயத்தைத் தாக்கியது “முஸ்லிம் குழுக்களே” என்று கூறிய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதி ராவும் கடும் குறைகூறலுக்கு ஆளானார்.
இதனிடையே நேற்றிரவு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஆலய வளாகத்துக்கு அருகில் ஒன்று திரண்டனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களோட்டிகளும் தீயணைப்பு, மீட்புப் படை வீரர் ஒருவரும் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. தீயணைப்பு வீரர் ஆபத்தான நிலையில் உள்ளாராம்.
ஒரு கூட்டம், எம்சிடி பெர்ஹாட்டையும் தாக்கி அங்கிருந்த கார்களுக்குத் தீ வைத்துள்ளது.. அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தில்தான் ஆலயம் அமைந்துள்ளது.