சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி, சுபாங் ஜெயா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயக் கலவரம் பற்றி விவாதிக்க மாநிலத்தின் தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி)க் கூட்டத்தைக் கூட்டுவார்.
“பாதுகாப்பையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துவது முக்கியம். அதற்குத்தான் முன்னுரிமை. அதற்காகத்தான் என்எஸ்சி கூட்டம்”, என சுபாங் ஜெயாவில் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
என்எஸ்சி எல்லா மாநிலங்களிலும் உண்டு.
என்எஸ்சி கூட்டத்தில் கலவரத்துக்குக் காரணமான “உண்மை நிலவரங்கள்” முன்வைக்கப்படும் என்று அமிருடின் கூறினார்.
“யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், எத்தனை பேர் என்பது தெரிய வேண்டும். ஒழுங்கை நிலைநாட்ட உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”, என்றாரவர்.
அமிருடின், தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமைப் பார்ப்பதற்காக மருத்துவமனை வந்திருந்தார். இன்று காலை ஆலயத்துக்கு அருகில் தாக்குதல்காரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட அடிப், அந்த மருத்துவமனையில்தான் தீவிர கவனிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.