நாட்டில் இப்பொழுது ஒரு பதற்றமான சூழ்நிலை உருவெடுத்துள்ளது, அதனைத் தனிக்கும் பொறுப்பு குடிமக்களாகிய நம் அனைவருக்கும் உண்டு என்பதால் நாம் அமைதியாக மிகப் பொறுப்புடன் சீபீல்ட் தோட்ட ஆலய இடம்மாற்று விவகாரத்தை அணுக வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால் சில இளைஞர்களின் செயல்பாடுகள் எல்லை மீறிச் சென்றுள்ளது கண்டிக்கத்தக்கது என பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய செய்தியில் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இரவு, கோவில் அருகில் சில பொறுப்பற்ற ஆசாமிகள் மேற்கொண்ட செயல்களால், அங்கு சொத்துகளுக்கும், உயிருக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கவலை அளிக்கக் கூடிய விவகாரம், இச்செயல் இந்தியச் சமுதாயத்திற்கு நன்மை அளிக்காது என்பதனைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
பல குற்றவாளிகள் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க இன. சமய உணர்வுகளைத் தூண்டி வருவதும், பெரிய ஒன்றுகூடலை கோலாலம்பூரில் நடத்தத் திட்டமிட்டுள்ளதையும் மக்கள் அறியாமலில்லை. அதனால் மக்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் காக்க அரசாங்கம் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வரும் இவ்வேளையில், நாம் வலிய வீண் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வழி வகுக்கலாமா என்று கேட்டார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
சீனர்கள் நம்மைவிடப் பெரிய சமுதாயம், ஆனால் அவர்கள் இனச் சமயவாதிகளின் ஒன்றுகூடலினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை எதிர்கொள்ள அவரவர் குடும்பத்தைத் தயார் செய்து வருகின்றனர். அவர்கள் பொது நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதுடன், பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களின் போக்குவரத்து, மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் எல்லாவித நடவடிக்கைகளையும் தவிர்த்து வருகின்றனர் என்பதை நாட்டு மக்கள் தொகையில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுபாங் ஜெயா சீபீல்ட் தோட்ட ஆலய இடம்மாற்று விவகாரத்தில் அணைவரும் மிகப் பொறுப்புடன் செயல்படவேண்டும். போலீசார் இவ்விகாரத்தில் எந்தப் பாகுபாடுமின்றி நீதியாகச் செயல்படுவர் என மலேசியப் போலீஸ் படைத்தலைவர் உறுதியளித்திருந்தும் சில பொறுப்பற்றவர்களின் செயல்கள் இந்திய இனத்திற்குத் தலைக்குனிவையும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா ஒரு பல இன மக்கள் வாழும் ஒரு அமைதியான நாடு, நமக்குள் ஏதும் கருத்து வேறுபாடுகள், பிணக்கு இருந்தால் அதனை முறையாகத் தீர்த்துக் கொள்ள நமக்குப் பல வழி வகைகள் உண்டு. ஆலய விவகாரத்தில் சட்டப்படி காரியம் நடக்க நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டும், நேற்று திங்கட்கிழமை இரவு சில அசம்பாவிதங்கள் நடந்து விட்டதாக சேவியர் குறிப்பிட்டார்
ஒரு இடத்தில் சில ஆயிரம் பேர்களைத் திரட்டி விடலாம், அதனை வைத்துக் கொண்டு ஆர்ப்பரிப்பது எளிது. ஆனால் நாடு முழுவதிலும் பரந்து கிடக்கும் நம் சமுதாயத்தினர், பல இடங்களில் சிறுபான்மையினராக இருப்பதை மறந்து விடக்கூடாது.
இந்த ஆலயத்தின் விவகாரம் சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஆட்சி அமைவதற்கு முன்பே நீதிமன்றத்தை அணுகி, தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநில அரசும் நீதிமன்றத் தீர்ப்பின்படியே அனைத்துத் தரப்பின் ஒப்புதலையும் பெற்று, கோவிலை மீண்டும் நிர்மாணிக்க மாற்று நிலமாக ஒரு ஏக்கர் நிலத்தையும் ஒரு மில்லியன் வெள்ளியையும் வழங்க மேம்பாட்டாளரை நிர்ப்பந்தித்தது.
அந்தத் தொகை இப்பொழுது 1.5 மில்லியனாக உயர்த்தப் பட்டுள்ளதாகவும் அறிகிறோம். இருப்பினும் அதில், உடன்பட முடியாத ஒரு சிலர், என்னைக் குற்றம் சொன்னதால், அவர்கள் சுயமாகச் சிறந்த முடிவை எடுக்கும் வண்ணம், நான் அவர்களுக்கு வழி விட்டேன்,. ஆனால் அதுவே இப்பொழுது ஆபத்தாக முடிந்து விட்டதைக் காண வேதனை அளிக்கிறது என்கிறார் லங்காவியில் இரண்டு நாள் மாநாட்டில் கலந்துக்கொள்ளும் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
.நாம் அனைவரும் அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இனபாகுபாடின்றி ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஒரு வெற்றிகரமான சமுதாயமாக மாற, வாழ்க்கையில் மட்டுமின்றி நாட்டு நடப்பிலும் நெளிவுசுளிவுகளுக்கு ஏற்ப நடக்க நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.