சுபாங் ஜெயாவிலிருக்கும் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் இறுதித் தீர்வு காணப்படும் வரையில் உடைக்கப்படமாட்டாது என்று பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி உறுதி அளித்துள்ளார்.
இந்த விவகாரம் பிரதமர் டாக்டர் மகாதிரின் கவனத்திற்கும்கூட கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
“இன்று காலை கோவில் பிரச்சனை குறித்து பிரதமரைச் சந்தித்தேன். அவர் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்தார்.
“அவருடன் விவாதித்த பின்னர், பெடரல் அரசாங்கம் மற்றும் (சிலாங்கூர்) மாநில அரசாங்கம் சார்பில் கோவில் இறுதித் தீர்வு காணும் வரையில் உடைக்கப்படாது என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன்”, என்று கோவிலில் இன்று மாலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வேதமூர்த்தி கூறினார்.
அச்செய்தியாளர் கூட்டத்தில் அவருடன் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவ் ஆகியோரும் இருந்தனர்.
146 ஆண்டுகால கோவில் தற்போது இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என்ற பக்தர்களின் விருப்பத்தைத் தெரிவிப்பதற்காக மகாதிரை விரைவில் சந்திக்கப் போவதாகவும் வேதமூர்த்தி வாக்குறுதியளித்தார்.
அதுவரையில், அனைவரும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். எரிச்சலூட்டும் எதையும் செய்தீர் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு முன்னதாக, மஇகாவைச் சேர்ந்த ஒரு கூட்டத்தினர் நேற்றிரவு பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் ஏன் கோவிலில் காணப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதில் அளித்த குலசேகரன் கோவில் குழு அவர்களை இன்று வரும்படி கேட்டுக் கொண்டதாக கூறினார்.