முகைதின்: சீபீல்ட் ஆலயத்தை வசப்படுத்திக்கொள்ள மேம்பாட்டாளரின் வழக்குரைஞர்கள் கூலிக்கு ஆள்களை அமர்த்தி இருந்தனர்

சுபாங் ஜெயா சீபீல்ட் ஆலயத்துக்குள் புகுந்து பக்தர்களைத் தாக்கியவர்கள் நில மேம்பாட்டு நிறுவன வழக்குரைஞர்களின் கைக்கூலிகள் என்று போலீஸ் முடிவு செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் கூறினார்.

“நில மேம்பாட்டு நிறுவனத்துடன் தொடர்புள்ளவர்கள் ஆலயம் அமைந்துள்ள நிலத்தை எடுத்துக்கொள்ளும் விஷயத்தில் சட்டப்படி நடந்துகொள்வதில்லை.

“நவம்பர் 26-இல் நிலமிருக்கும் இடத்துக்கு மேம்பாட்டாளரும் போலீசும் வந்து சேர்வதற்குமுன் ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து அதை வசப்படுத்திக்கொள்ள நில மேம்பாட்டாளரின் வழக்குரைஞர்கள் மலாய்க்காரர்களைக் கொண்ட கும்பல் ஒன்றைக் கூலிக்கு அமர்த்தி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

“அந்த வேலைக்காக சுமார் 50பேர் அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு ஆளுக்கு ரிம150இலிருந்து ரிம300வரை கொடுக்கப்பட்டது”, என முகைதின் இன்று புத்ரா ஜெயாவில் கூறினார்.

நேற்று போலீசார் விசாரணைக்காக கைது செய்துத் தடுத்து வைத்துள்ள 21பேரில் ஒன் சிட்டி மேம்பாட்டு நிறுவனத்துக்காக செயல்பட்ட இரண்டு வழக்குரைஞர்களும் உள்ளிட்டிருப்பதாக தெரிகிறது.

நில மேம்பாட்டு நிறுவனத்துடன் தொடர்புள்ளவர்களின் “அவசரமான, கவனக்குறைவான” செயல்கள் வருத்தத்துக்குரியவை, சட்ட விரோதமானவை என்று முகைதின் கூறினார்.

அச்சம்பவத்தில் சட்டத்தைமீறி நடந்துகொண்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை அமைச்சர் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.