சிலாங்கூர் மாநில அரசுடன் விவாதித்த பின்னர், சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதை அறிவிப்பதற்கு ஷா அலாமில் நாளை தேவான் எனக்ஸ் நெகிரி சிலாங்கூரில் ஒரு செய்தியாளர் கூட்டம் நடத்தப்படும்.
கோவில் வளாகத்தில் இரண்டு நாள்கள் நடந்த கலவரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் பற்றி விவாதிப்பதற்காக தாம் பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி மற்றும் கிராமப்புற மேம்பாட்டு துணை அமைச்சர் ஆர். சிவராசா ஆகியோரைச் சந்தித்ததாக சிலாங்கூர் மந்திர் பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த விவாதத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. கணபதிராவ் மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி. குணராஜ் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருந்தனர்.
இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அனைத்து தரப்பினரும் பொது ஒழுங்குமுறையை குலைத்துவிட வேண்டாம் என்று மந்திரி பெசார் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் அரசு சட்டத்தைப் பின்பற்றவும், பொது ஒழுங்கை உறுதிப்படுத்தவும், இந்தப் பிரச்சனைக்கு மிகச் சிறந்த தீர்வைக் காணவும் ஈடுபாடு கொண்டிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.