ஆலயம் அமைந்துள்ள இடத்தை மேம்பாட்டாளர் எடுத்துக்கொள்வதைத் தள்ளி வைக்கக் கோரும் மனு நிராகரிப்பு

இன்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் சீபீல்ட் மகாமாரியம்மன் ஆலய இடமாற்றம் தொடர்பில் வாதிகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்ப்புக்கு எதிராகவும் ஆலயத்தின் இடமாற்றத்தைத் தள்ளிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளு,ம் மனுவை நிராகரித்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி குணாளன் முனியாண்டி, ஆலய பக்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்களான எஸ்.தங்கராஜ், எம்.எம்.மோகனகிருஷ்ணன், எஸ். நாகராஜா ஆகியோர் செய்துகொண்ட மனுமீது விசாரணை நடத்தி அத்தீர்ப்பை வழங்கினார்.

அம்மூவருக்கும் வழக்கு தொடுக்கும் உரிமை இல்லை என்பதையும் சம்பந்தப்பட்ட நிலம் சட்டப்படி மேம்பாட்டாளருக்கே சொந்தமானது என்பதையும் கண்டறிந்து நீதிபதி அத்தீர்ப்பை வழங்கியதாக எதிர்வாதிகளில் ஒருவரான ஒன்சிட்டி மேம்பாட்டு நிறுவனத்தின் வழக்குரைஞர் குளோடியா சீ பெக் ஈ கூறினார்.

ஆனால், நீதிபதி குணாளன், அதே ஆலயம் சம்பந்தப்பட்ட இன்னொரு வழக்கை- தடையுத்தரவு கோரும் மனுவை- விசாரிப்பதினின்றும் விலகிக் கொண்டார்.

ஆலயம் சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்திருப்பதால் அதே ஆலயம் தொடர்பாக தடையுத்தரவு கோரும் இந்த வழக்கை இன்னொரு நீதிபதியிடம் மாற்றிவிட அவர் முடிவு செய்தார்.

“(ஆலயம் சம்பந்தப்பட்ட) ஒரு வழக்கை இப்போதுதான் தள்ளுபடி செய்திருப்பதால் இந்த வழக்கை இன்னொரு நீதிபதி விசாரிப்பதே நல்லது என்றார்.

“பாரபட்சம் என்று கூறப்படுவதற்கு அவர் இடமளிக்க விரும்பவில்லை. எனவே, இந்த வழக்கை வேறொரு நீதிபதி விசாரிப்பார்”, என ஆலயப் பணிக்குழு உறுப்பினர் வி.கே. ரகு கூறினார்.

தடையுத்தரவு கோரி மனுவைப் பதிவு செய்த குழு, இன்று மறுபடியும் அதைப் பதிவு செய்யும் என்றாரவர்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, அம்மனு ஆலய விவகாரத்தில் இறுதி முடிவு செய்யப்படும்வரை ஒன்சிட்டி முகவர்களோ ஆள்களோ அடித்து உடைப்பதற்காகவோ வேறு காரணங்க்ளுக்காகவோ ஆலயத்தை நெருங்குவதைத் தடுப்பதற்குத் தடையுத்தரவு கோருகிறது.

எம்.ராமச்சந்திரனும் மேலும் ஒன்பதின்மரும் அதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் ஆலயப் பக்தர்கள் 40 பேரைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொண்டனர்.