ஜனநாயகத்திற்கு வரம்பு இருப்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், சீபீல்ட் கலவரம் பற்றி மகாதிர்

 

நாடாளுமன்றம் | ஜனநாயகத்திற்கு அதற்குரிய வரம்பு இருக்கிறது. மக்கள் அதன் எல்லைக்கோடுகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்று பிரதமர் மகாதிர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

அனைத்துத் தரப்பினரும் மற்ற தரப்பினருக்கு மனவருத்தம் அளிக்கக்கூடிய சினமூட்டும் அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கண்மூடித்தனமாகத் தண்டிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல, ஆனால் ஜனநாயகத்திற்கு வரம்புகள் உண்டு. நாம் அனைவரும் அந்த வரம்புகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சுபாங் ஜெயா, சீபீல்ட் இந்துக் கோவிலில் நடந்த கலவரம் பற்றி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த மகாதிர் கூறினார்.

சட்டத்தை மீறுவதற்கு எவரும் தாங்கள் விரும்பியபடி செயல்பட முடியாது, மற்றவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் கலவரத்தை உண்டாக்க முடியாது என்று அவர் கூறினார்.

பேச்சு சுதந்திரத்திற்கான உரிமை என்பது நாம் மற்றவர்களின் உணர்வுகளுக்குத் தொல்லையூட்டலாம் என்றாகாது என்றாரவர்.

நாட்டின் பாதுகாப்பும் திடநிலையும் நமது ஒருமித்த பொறுப்பு என்பதை நாம் உணர்ந்திருப்பது முக்கியமாகும். ஆகவே, மக்கள் அவர்களின் கருத்துக்ளைத் தெரிவிக்கும் போது அல்லது அச்சம்பவம் குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன என்று மகாதிர் மேலும் கூறினார்.