உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அமைச்சர்நிலை அறிக்கை ஒன்றில் சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம் ஆலயத்தில் திங்கள்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் நடந்த நிகழ்வுகளை விவரமாக விளக்கினார்.
முதல் நாள் மேம்பாட்டாளர் ஆலயத்தை இடமாற்றம் செய்யயும் நடவடிக்கையைச் செயல்படுத்த முனைந்தார். ஆலயத்தையும் ஆது அமைந்துள்ள இடத்தையும் வசப்படுத்த கூலிக்கு ஆள்களை அமர்த்தினார். அதன் விளைவு மோதல்கள் நிகழ்ந்து கலவரமாக வெடித்தது.
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும் கலவரம் மூண்டது. தீயணைப்பு, மீட்புத் துறை பணியாளர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இப்படி அடுத்தடுத்து நிறைய நடந்து விட்டன. நடந்தவற்றை தீர விசாரிக்க போலீஸ் “ஒப்ஸ் சீபீல்ட்” பணிக்குழுவை அமைத்துள்ளதாக முகைதின் கூறினார்.
இதுவரை 30பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களில் 24 பேர் மலாய்க்காரர்கள், ஐவர் இந்தியர், ஒருவர் சீனர்.
ஆலயத்தை வசப்படுத்திக்கொள்ள கூலிக்கு ஆள்கள் அமர்த்தப்பட்டார்கள் என்றும் அதற்குப் பொறுப்பானவர்களை போலீஸ் அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.
சம்பவம் நடந்த இடத்தில் பல பொருள்களை போலீசார் கைப்பற்றினர்.
தீயணைப்புப் படை பணியாளர் அடிப் தாக்கப்பட்ட சம்பவம் குற்றவியல் சட்டம் பகுதி 307-இன்கீழ் விசாரிக்கப்படுகிறது என்றாரவர். அது கொலை முயற்சி சட்டமாகும்.
போலீசார் அறிவியல் சார்ந்த முறையில் புலன் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அமைச்சர் சொன்னார். இதற்கு வ்சதியாக புக்கிட் அமான் தடயச் சோதனைக் கூடத்தின் சிறப்புக் குழு ஒன்று சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நிறுத்தி வைக்கப்படும்.
“போலீஸ் பொதுமக்களின் ஒத்துழைப்பை வரவேற்கிறது. தகவல்கள் அளித்து அவர்கள் விசாரணைக்கு உதவலாம்”, என்றார்.
சீபீல்ட் ஆலய நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைச்சர் தொகுத்தளித்தார்:
நவம்பர் 26
பின்னிரவு 2.40- சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் சச்சரவு என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்குப் புகார்கள் வருகின்றன. அங்கு செல்லுமாறு போலீசுக்கு உத்தரவு பறக்கிறது.
பின்னிரவு 2.50- நான்கு போலீஸ் வாகனங்கள் ஆலயம் வந்து சேர்கின்றன. ஆனால், அவை உள்ளே செல்ல முடியவில்லை. ஆலய வாசலில் ஒரு டேங்கர் நிறுத்தி வைக்கப்பட்டு ஆலய வளாகத்தினுள்ளே செல்ல முடியாதபடி தடுக்கிறது. ஒரு போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்படுகிறது.
பின்னிரவு 3.30- சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவரிடமிருந்து கூட்டரசு சேமப் படை (கலகத் தடுப்புப் போலீஸ்)க்கும் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கும் அழைப்பு போகிறது.
அதிகாலை மணி 4- சுபாங் மாவட்ட போலீஸ் நிலையத்திலிருந்து 99 போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து சேர்கின்றனர்.
போலீஸ் உதவிப் படை வந்து கொண்டிருக்கும் வேளையில், கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களுக்கும் ஆலயப் பக்தர்களுக்கும் சண்டை மூள்கிறது. கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் இடத்தைவிட்டுத் தப்பி ஓடுகிறார்கள். பக்தர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு- அவை கூலிப்படையினரின் வாகனங்கள் என்று நம்பி- தீ வைக்கின்றனர்.
4.38- தீவைப்பு குறித்து தீயணைப்பு, மீட்புத் துறைக்குத் தெரிவிக்கப்படுகிறது. 25 நிமிடங்களில் தீயணைப்பு வண்டிகள் வந்து சேர்கின்றன.
5.30- கலகத் தடுப்புப் பிரிவிலிருந்து இரு அதிகாரிகளும் 201 வீரர்களும் வந்து சேர்கிறார்கள். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களில் மூவர், பக்தர்களில் மூவர், ஒரு போலீஸ்காரர் காயமடைந்தனர்.
நவம்பர் 27
ஆலயத்தைச் சுற்றிலும் சுமார் 10,000 ஆதரவாளர்கள் கூடினர். அவர்களில் சிலர் கலகம் செய்தார்கள், வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.
நெருப்பை அணைக்க முயன்ற தீயணைப்பு, மீட்புத் துறை பணியாளர்கள்
தாக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் முகம்மட் அடிப் முகம்மட் காசிம் படுமோசமாக தாக்கப்பட்டார்.
கலகக்காரர்களில் சிலர் ஒன்சிட்டி மேம்பாட்டு நிறுவனம் அமைந்துள்ள எம்சிடி டவரையும் தாக்கிச் சேதப்படுத்தினர்.