சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பிரச்சினை தொடர்பான வழக்கு, சட்டத்துறைத் தலைவர் தலைமையகத்தின் கண்காணிப்பில் கையாளப்படும் என்று சட்டத்துறைத் தலைவர், டோமி தோமஸ் கூறியுள்ளார்.
“இந்த வழக்கு சம்பந்தப்பட்ட முக்கியப் பிரச்சினைகளின் விசாரணையை, இலாகாவின் துணைத் தலைவர் மேற்பார்வையிடுவார், வழக்கின் அபிவிருத்தியை அவ்வப்போது அவர் என்னிடம் தெரிவிப்பார்,” என்றார் தோமஸ்.
இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் வழக்குரைஞர்களையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“சிவில் வழக்கில், நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவுறுத்தல்களிலிருந்து இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.
“எனவே, சம்பந்தப்பட்டவர்களின் வழக்குரைஞர்களைச் சட்டத்துறை அலுவலகத்தில் சந்தித்து, இந்தச் சர்ச்சைக்குத் தீர்வுகாண என் தரப்பு தயாராக உள்ளது,” என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தோமஸ் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இக்கலவரத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பினர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில், காவல்துறையுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.