கட்சியின் தலைமைச் செயலாளர், உதவித் தலைவர் போன்ற பதவிகளுக்குத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தான் அவசரப்படவில்லை என அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அனைத்துத் தரப்பினருடனான பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல்களின் மூலம் பெறப்படும் கருத்துக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அந்தப் பிகேஆர் தலைவர் கூறினார்.
“பேச்சுவார்த்தைகளின் போது அவசரப்படத் தேவையில்லை, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டியுள்ளது,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இருப்பினும், அடுத்த ஆண்டுக்கு முன்னதாகவே முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
கட்சியின் விதிகள் படி, தலைவருக்கு இரண்டு உதவித் தலைவர்கள், மத்திய நிர்வாகக் குழுவில் 5 உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், பொருளாளர், தகவல் பிரிவுத் தலைவர் மற்றும் 14 மாநிலத் தலைவர்களை நியமிக்கும் உரிமை உள்ளது.
முன்னதாக, துணைத் தலைவர் பதவிக்கு அஸ்மின் அலியிடம் தோல்வி கண்ட ரஃபிசி ரம்லி, கட்சியின் தலைமைச் செயலாளர் அல்லது உதவித் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
அதுபற்றி கேட்டபோது, “ஏன் ரஃபிசி? இன்னும் அதிகமான தலைவர்கள் இருக்கிறார்கள்,” என்று அன்வார் தெரிவித்தார்.