எதிர்வரும் டிசம்பர் 8-ம் தேதி, ஐசெர்ட் மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஏற்பாடாகியுள்ள பேரணியைத் தொடர வேண்டாம் எனக் கிளாந்தான் முஃப்தி, முகமட் சுக்ரி மொகமட் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் தற்போதைய பதட்டமான நிலையைக் கருத்தில் கொண்டு, அப்பேரணியைத் தொடர வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.
அப்பேரணியை நடத்தினால், ‘தேவையற்ற சம்பவங்கள்’தான் ஏற்படும், அதுமட்டுமின்றி, பொறுப்பற்ற சில தரப்பினர் அப்பேரணியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர் என்றும் அவர் சொன்னார்.
“இஸ்லாத்தில்கூட, ஒரு விஷயத்தை நாம் செய்யும் முன், அதன் நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
“நாம் செய்யும் ஒரு விஷயம், அதிக நன்மைகளைவிட, தீமைகளையேக் கொண்டுவரும் என நமக்குத் தெரியும் போது, நாம் ஏன் அதனைச் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறியதாக என்.எஸ்.தி. செய்திகள் கூறுகின்றன.
ஐசெர்ட்டை ஏற்றுகொள்ளாத அரசாங்கத்தின் முடிவை, மசூதிகளில் பிரார்த்தனைகள் நடத்தி, நாம் நமது நன்றியுணர்வைத் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
முன்னதாக, அம்னோ மற்றும் பாஸ், ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்தன, ஆனால் அரசாங்கம் ஐசெர்ட்டில் கையொப்பமிடாது என்று பிரதமர் அறிவித்ததன் விளைவாக, அந்த எதிர்ப்புப் பேரணி, நன்றி கூறும் பேரணியாக பெயர் மாற்றம் கண்டது.
‘சம்பந்தம் இல்லை’
இதற்கிடையில், மாரியம்மன் கோவிலில் நடந்த கலவரத்திற்கும் இப்பேரணிக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறியதோடு, அப்பேரணி கண்டிப்பாகத் தொடரப்படும் என்றும் உம்மா தெரிவித்துள்ளது.
“இப்பேரணிக்கும் கோவில் பிரச்சனைக்கும் தொடர்பு இல்லை. பிரதமரும் உள்துறை அமைச்சரும், கோவிலில் நடந்த கலவரம், இனப் பிரச்சனையால் எழுந்ததல்ல என்று கூறியுள்ளனர்.
“எனவே, பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பயப்பட வேண்டாம்,” என்று உம்மா இயக்கத்தின் தலைமைச் செயலாளர் அமினுட்டின் யாஹ்யா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அப்பேரணியின் போது குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் கும்பலையும் அவர் எச்சரித்தார்.