கோவில் கலவரம் – இனவெறி மற்றும் அடுத்தவரைச் சாடும் மனப்பான்மையை நிறுத்துங்கள்

கருத்து | சுபாங் ஜெயா, சீஃபீல்ட் கோவில் கலவரம் பற்றி பல கருத்துகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொருவரும் ஒரு சொந்தக் கதையைக் கூறிவருகின்றனர்.

இக்கலவரத்திற்குக் காரணம் அம்னோ மற்றும் பாஸ் எனச் சொல்லி, மலாய்க்காரர் அல்லாதவர்கள் சமூக வலைத் தளங்களில் பரப்பிவரும் செய்திகளையும் சாபங்களையும் நான் படித்தேன்.

அதேசமயம், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், எவ்வாறு மலாய் மேலாதிக்கம் அழிக்கப்பட்டு வருகிறது என்பதை மலாய்க்காரர்கள் மத்தியில் நினைவுறுத்திய, மலாய்க்காரர்களின் இனவாத கருத்துக்கள் மற்றும் செய்திகளையும் கூட நான் படித்தேன்.

மலேசியாகினி அல்லது மற்ற ஆங்கிலச் செய்தி தளங்களில் வெளியான, நகரவாசிகள் மற்றும் மலாய்க்காரர் அல்லாதவர்களின் கருத்துகள் இனவெறியை வெகுவாகப் பற்றி எரியச் செய்துள்ளன.

அவர்களில் பலரின் கருத்துகள் போலிசாரைக் குற்றம் சொல்லியுள்ளன, போலிசார் இக்கலவரத்தைத் தடுத்து நிறுத்தாமல், வெறுமனே இருந்துவிட்டனர் என்று.

ஒவ்வொரு கதையிலும் வித்தியாசமான பதிப்பு உள்ளது. பெரும்பாலும், மிகவும் நேர்மையான பதிப்பு, இந்த பல்வகைபட்ட பதிப்புகள் மற்றும் விளக்கங்கள் மத்தியில்தான் இருக்கும்.

துரதிஷ்டவசமாக, மலேசியாவில் இன, மத சார்பான கருத்துகள் நம்மிடையே ஆழமாக வேரூன்றிவிட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக, அடுத்தவரைச் சுட்டிக்காட்டி, அவர் இனவெறியர் என்று குறைகூறுவது பழக்கமாகிவிட்டது.

இன, மதவெறி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது எனும் உண்மையை நாம் அரிதாகவே ஏற்றுக்கொள்கிறோம்.

மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கிடையே இது சாதாரணமாகிவிட்டது, (பொதுவாக மலாய்க்காரர்களைவிட மலாய்க்காரர் அல்லாதவரே என் நண்பர்களில் அதிகம்) இந்த நாட்டில் இனவாதப் பிரச்சினைகள் உருவாவதற்கு ஒரு சாரார்தான் காரணம்: மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தான் எனும் நம்பிக்கை.

அதைப்போலவே, மலாய்க்காரர்களில் அதிகமானோர் (படித்தவர் முதற்கொண்டு) மலாய்க்காரர்களை, மலாய்க்காரர் அல்லாதவர்கள் ஒடுக்குகிறார்கள் (இந்த உணர்வு ஒரு வலுவான தர்க்கத்தின் அடிப்படையில் இல்லை என்றாலும்) எனக் கோபங்கொண்டு; ஒரு சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே அவர்களைப் பார்ப்பது.

பிற இனங்களின் கவலைகளைப் புரிந்து கொள்ளுங்கள்

ஆகையால், இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான நிகழ்வுகள் நடக்கும்போது, நாம் நம் சொந்த இனவாத சார்புகளால் எளிதாகப் பாதிக்கப்படுகிறோம்.

இந்தியர்கள் அல்லது மலாய்க்காரர் அல்லாதவர் மத்தியில், மலாய்க்காரர்கள் அக்கோவிலுக்குள் நுழைய போகிறார்கள், போலிஸ்காரர்கள் அதைத் தடுத்து நிறுத்தாமல் மலாய் குண்டர் கும்பலுக்கு வழிவிட, சதித்திட்டம் போடுகிறார்கள் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

அதைப்போலவே, தீயணைப்பு வீரர் முகமட் அடிப் காசிம், ஒரு சில குற்றவாளிகளால் தாக்கப்பட்ட போது, ஒட்டுமொத்த இந்தியர்கள் மீதும் கோபங்கொண்டு, அவர்கள் மீது குற்றம் சுமத்த மலாய்க்காரர்களுக்கும் மிக எளிதாக இருந்தது.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்திலும் தொடரும். பலமுறை நடக்கும், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது கணக்கில்லை. திட்டமிடப்பட்டது போல, பாஸ் – அம்னோ ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணியைத் தொடர்ந்தாலும் அல்லது மத்திய அரசாங்கம் ஐசெர்ட் மாநாட்டில் கையெழுத்து இட்டாலும் இடாவிட்டாலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தே தீரும்.

நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றையும், இனக் கண்ணோட்டத்துடன் நாம் பார்ப்போமானால், இன அடிப்படையிலேயே நாம் அணுகுவோமானால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.

மற்றவர்களைக் குறைக்கூறாமல், மற்றவர்கள்தான் முதலில் செயல்பட வேண்டும் என்று காத்திருக்காமல் நாம் இருந்தால், இதுபோன்ற சம்பவங்களை நாம் தவிர்க்கலாம்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் (மலாய்க்காரர், இந்தியர், சீனர், இபான், கடாசான், மூருட், பிடாயா, டூசுன் மற்றும் எல்லா இனமும்) தூக்கி எறிய வேண்டிய இன சார்பு இருக்கிறது எனும் உண்மையை நாம் உணர வேண்டும்.

இன வெறியை அவர்கள் தூண்டிவிடுகிறார்கள் என்று நாம் மற்றவரைக் குறைசொல்லக் கூடாது, காரணம் நமக்குள்ளும் அந்த உணர்வு இருக்கிறது, ஆக மற்றவரின் மனநிலை, அவர்களின் சூழலை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

மலாய்க்காரர்கள், மலாய்க்காரர் அல்லாதவரின் பின்னணியைப் புரிந்துகொள்ள வேண்டும். அதைப்போலவே, மலாய்க்காரர் அல்லாதவரும் மலாய்க்காரர்களைத் தொடர்ந்து சோம்பேறிகள், முட்டாள்கள் எனப் பார்க்கக்கூடாது (குறிப்பாக அரசியலமைப்பிற்குரிய விஷயம் இல்லை என்றால், மலாய்க்காரர்களின் கருத்துகளை பற்றற்ற கருத்துக்கள் என்று ஒதுக்கி விடலாம்).

இறுதியாக, பல்லின நண்பர்களைக் கொண்டிருக்க முயற்சி செய்யுங்கள். மற்றவர்களுடன் நட்புறவு கொண்டிருந்தால்தான், அவர்களின் கவலைகளைப் புரிந்துகொண்டு, இன சார்பு நிலையிலிருந்து நம்மால் வெளியேற முடியும்.

நாம் நம்மினக் குழுவினருடன் மட்டும் இருந்துகொண்டு, எப்போதும் காரணங்கள் சொல்லி, மற்றவர்களைக் குறைகூறி வந்தோமானால் (தேசியப் பள்ளி தவறு, பன்றி இறைச்சி தவறு, தலிபான் தவறு), இந்நாட்டில் இனப் பிரச்சனைகள் எழ நாம்தான் காரணம்.

 

எழுத்து : ரஃபிசி ரம்லி , பிகேஆர் முன்னாள் உதவித் தலைவர்

மொழியாக்கம் செய்யப்பட்டது