கேமரன் மலை நாடாளுமன்ற இருக்கை காலி, நீதிமன்றம் தீர்ப்பு

 

கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் கேமரன் மலை நாடாளுமன்ற இருக்கையைக் காலி செய்து இன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு மறு தேர்தலுக்கு வழிவகுத்துள்ளது.

அத்தொகுதி தேர்தலில் ஊழல் நடவடிக்கைகள் இருந்தன. அது பிஎன் வேட்பாளர், மஇகா உதவித் தலைவர் சி. சிவராஜா, மே 9 பொதுத் தேர்தலில் வெற்றிபெறச் செய்தது என்பதை டிஎபி வேட்பாளர் எம். மனோகரன் நிருபித்துள்ளார் என்று நீதிபதி அஸிஸா நவாவி கூறினார்.

ஜூன் 5-இல், மனோகரன் தாக்கல் செய்துள்ள தேர்தல் மனுவில் சிவராஜா மற்றும் ஜெலாய் சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்டி வான் இஸ்மாயில் ஆகிய இருவரும் ஒன்பது கிராமத் தலைவர்களைச் சந்தித்து அவர்களிடம் அத்தொகுதி ஓராங் அஸ்லிகள் ஒவ்வொருவருக்கும் ரிம30 லிருந்து ரிம1000 இடையில் கொடுப்பத்தற்காக பணம் கொடுக்கப்பட்டதாக மனோகரன் கூறியிருந்தார்.

வான் ரோஸ்டி இப்போது பகாங் மந்திரி பெசாராக இருக்கிறார்.

கேமரன் மலை இருக்கையை சிவராஜா 10, 307 வாக்குகள் பெற்று வென்றார். மனோகரன் 9,710 வாக்குகளைப் பெற்றார். பாஸ் வேட்பாள வான் மாகாடிர் வான் மாமுட் 3,587 வாக்குகளும், பிஎஸ்எம்மின் பி.சுரேஷ் குமார் 680 வாக்குகளும் பெர்ஜாசாவின் முகமட் தாகிர் காசிம் 81 வாக்குகளும் பெற்றனர்.

இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக சிவராஜா மலேசியாகினியிடம் கூறினார்.

மஇகாவிடமுள்ள இரு நாடாளுமன்ற இருக்கைகளில் ஒன்று கேமரன் மலை. மற்றொன்று தப்பா. அது மஇகா துணைத் தலைவர் வி. சரவணன் வசமுள்ளது.