சீபீல்ட் கோவில் நிலத்தை வாங்குவதற்கு நிதி திரட்டுகிறார் வின்சென்ட் டான்

 

சீபீல்ட் மாகா மாரியம்மன் கோவில் அமைந்திருக்கும் நிலத்தைப் பொதுமக்கள் வாங்குவதைச் சாத்தியமாக்க பிரபல வணிகர் வின்சென்ட் டான் நிதி திரட்ட முனைந்துள்ளார்.

இதன் மூலம் அந்தக் கோவில் இப்போது இருக்கும் நிலத்திலேயே இருக்க முடியும் என்று அவர் கூறினார்.

மேலும், த ஸ்டார் ஒன்லைன் செய்திப்படி, பெர்ஜெயா குழுமத்தின் நிறுவனரும் ஆலோசகருமான வின்சென்ட் டான் அந்நிதியை தொடக்குவதற்கு ரிம500,000 அளிக்க வாக்குறுதி அளித்துள்ளார்.

பொதுமக்கள் அந்த நிலத்தை வாங்க முடியும், மேம்பாட்டாளாருக்குரிய பணத்தைக் கொடுக்கலாம் மற்றும் அந்த நிலம் அங்கேயே இருக்கலாம் என்றாரவர்.

சிலாங்கூர் மாநில அரசு அந்த நிலத்தை வாங்கும் என்று எதிர்பார்ப்பது கடினமாகும்.

கோவிலை அங்கேயே வைத்திருக்க அதிகமான மலேசியர்கள் நன்கொடை அளிக்க முன்வருவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்ததாக ஸ்டார் ஒன்லைன் செய்தி கூறுகிறது.

இது குறித்த மேல்விபரங்கள் விரைவில் தரப்படும் என்று டான் கூறினார்.

முன்னாள் எம்சிடி தலைவர் பாரி கோ, டானுடன் இணைந்துள்ளார். அவர் ரிம500,000 அளிக்க உறுதியளித்துள்ளார்.

கோவில் அமைந்திருக்கும் நிலம் ஒன் சிட்டி மேம்பாட்டு நிறுவனத்திற்கு சொந்தமானது. அது எம்சிடி பெர்ஹாட்டின் துணை நிறுவனமாகும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிலிப்பைன்ஸ் அயலா கோர்ப்பர்சான் எம்சிடியை எடுத்துக்கொண்டது.

த ஸ்டார் ஒன்லைன் செய்திப்படி, அந்த நிலத்தின் தற்போதைய விலை ரிம14.37 மில்லியனுக்கும் ரிம15.33 மில்லியனுக்கும் இடையிலாகும்.