மகாதீர் : வேதமூர்த்தியும் மஸ்லியும் சிறப்பாகவே செயல்படுகின்றனர்

பி வேதமூர்த்தி மற்றும் மஸ்லி மாலிக் இருவரும் தங்கள் கடமைகளில் சிறந்து விளங்குகின்றனர் என்று நம்புவதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார்.

“ஆமாம் (நான் மனநிறைவு கொள்கிறேன்), அவர்கள் சிறப்பாகவே பணியாற்றுகின்றனர்,” என்று நேற்றிரவு, கோலாலம்பூரில், மலேசிய மருத்துவச் சங்கம் (எம்எம்ஏ) வழங்கிய ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், பிரதமர் துறை இலாகாவில், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வுக்கான பொறுப்பாளராக வேதமூர்த்தியையும் கல்வி அமைச்சராக மஸ்லி மாலிக்கையும் நியமித்தது.

சமீபத்தில், மகாதிரின் ஊடக ஆலோசகர், ஏ காடிர் ஜாசின், அவ்விரு அமைச்சர்களையும் மகாதிர் “விரிவுரை” (அறிவுரை) செய்ததாக தனது வலைப்பதிவில் கூறியிருந்தார்.

இதுபற்றி கேட்டபோது, “நான் அவர்களிடம் சாதாரணமாகப் பேசினேன், விரிவுரை எல்லாம் நிகழ்த்தவில்லை, பேசினேன் அவ்வளவுதான்,” என்று மகாதிர் கூறினார்.

இதற்கு முன்னர், இனப் பாகுபாட்டின் அனைத்து வடிவங்களையும் அகற்றுவதற்கான சர்வதேச மாநாட்டில் (ஐசெர்ட்) அரசாங்கம் அடுத்தாண்டு கையெழுத்திட எண்ணம் கொண்டுள்ளதாக, மக்கள் அவையில் வேதமூர்த்தி தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரைப் பதவிவிலகுமாறு வலியுறுத்தப்பட்டது.

இந்த அறிவிப்பு, மலாய் முஸ்லிம் மக்களிடையே பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியதால், பிரதமர் அலுவலகம் அத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.

அடுத்ததாக, ஹிண்ட்ராப் தலைவரான வேதமூர்த்தி, சுபாங், சீஃப்பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் இந்து கோவிலில், கலவரங்களைக் கையாண்ட போலிசாரின் முறைக்கு கண்டனம் தெரிவித்தபோது, மீண்டும் அவருக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டது.

பள்ளி மாணவர்கள் கருப்புக் காலணி அணிய வேண்டும் மற்றும் கட்டாயம் நீச்சல் பழக வேண்டும் என்ற பரிந்துரைகளால் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் பல தரப்பட்ட மக்களின் கண்டனத்திற்கு ஆளாகினார்.