மசீச நாளை அதன் ஆண்டுக் கூட்டத்தில் பிஎன்னில் தொடர்ந்து இருப்பதா அல்லது அக்கூட்டணியைக் கலைக்கச் சொல்வதா என்று முடிவு செய்யும். மசீச துணைத் தலைவர் டாக்டர் மா ஹங் சூன் இன்று இதைத் தெரிவித்தார்.
“சீனர் சமூகம் பிஎன்னிலிருந்து விலகுவதை விரும்புகிறது . அதே வேளை பிஎன்னை நிறுவிய கட்சிகளில் ஒன்று என்ற முறையில் மசீச சுதந்திரம் பெற்றதிலிருந்து அம்னோவுடனும் மஇகா-வுடனும் ‘வாழ்விலும் தாழ்விலும்’ ஒன்றாய் இருப்போம் என்ற வகையில் உறவுகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்கவியலாது.
“எதிர்பாராத பெரிய தோல்வியை அடுத்து பிஎன் நிலை தாழ்ந்திருக்கும் நேரத்தில் அதிலிருந்து அப்படியே விலகிச் சென்று விடுவதா அல்லது நிறுவன உறுப்பினர் என்ற முறையில் பிஎன்னைக் கலைக்கச் சொல்வதா என்ற கேள்வி எழுகின்றது”, என இன்று மசீச இளைஞர் பேரவையைத் தொடக்கி வைத்தபோது அவர் கூறினார்.
மசீசவும் அதன் உறுப்பினர்களும் எதிர்கால நன்மையை முன்னிட்டு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றாரவர்.
ஒரு நேரத்தில் 13கட்சிகளின் கூட்டணியாக இருந்த பிஎன்னில் இப்போது எஞ்சியிருப்பவை மூன்றுதான் – அம்னோ, மசீச, மஇகா. மற்ற கட்சிகள் 14வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணியிலிருந்து விலகிக் கொண்டன.