நேற்றிரவு, மலேசிய மருத்துவச் சங்க (எம்எம்ஏ) ஏற்பாட்டிலான விருந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் டாக்டர் மகாதிர், மருத்துவச் சேவைக்கான அதிக செலவுகள் மத்திய அரசாங்கத்திற்கு ஒரு பெரும் சுமையைக் கொடுக்கிறது என்று தெரிவித்தார்.
“அரசாங்கம் இலவச மருந்துகளை வழங்கினால், விரைவில் நாங்கள் திவாலாகிவிடுவோம்,” என்று கூறிய அவர், “மருத்துவத்தில் தற்போது பல மருத்துவக் கிளைகளும் அறுவை சிகிச்சைகளும் உள்ளன,” என்று மேலும் கூறினார்.
முன்னதாக, எம்எம்ஏ-வின் தலைவர், டாக்டர் முகமட் நமாஷி இப்ராஹிம், நாட்டின் சுகாதாரத் திட்டத்தை இன்னும் சீரானதாக மாற்ற வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தியதோடு; அத்துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்காக அரச விசாரணை ஆணையத்தை (ஆர்சிஐ) நிறுவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கம் மக்களுக்கு இலவச மருந்துகள் மற்றும் மானியங்களை வழங்கியுள்ளதாக செய்தியாளர்களிடம் மகாதிர் கூறினார்.
“நாங்கள் ஏற்கனவே இலவச மருந்துகளை வழங்கியுள்ளோம், மருந்துகளுக்கான மானியங்களும் வழங்குகிறோம்.
“பொது சுகாதாரத்திற்கான சிறப்பு திட்டங்கள் உள்ளன,” என்று அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர் ஒரு மருத்துவராக இருந்த மகாதிர் கூறினார்.