பக்காத்தான் ஹராப்பானால் கேமரன் மலையை வெல்ல முடியும், அஸ்மின் நம்பிக்கை

கேமரன் மலை நாடாளுமன்ற இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானால் அத்தொகுதியைக் கைப்பற்ற முடியும் என்று பிகேஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார்.

கேமரன் மலை இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர், ஒரு குறிப்பிட்டக் கட்சியைதான் சார்ந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது, அவர் ஹராப்பான் சார்பில் போட்டியிடுவார் என்று அஸ்மின் தெரிவித்தார்.

“இதற்குக் காரணம், பிரதமர் துன் டாக்டர் மகாதீர், நாம் ஹராப்பான் கூட்டணியாகதான் செயல்பட வேண்டும், கட்சி ரீதியாக அல்ல, என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார்,” என்று அஸ்மின் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

நேற்று, கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம், கேமரன் மலை நாடாளுமன்றத்தின், 14-ம் பொதுத் தேர்தல் முடிவுகளை இரத்து செய்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு மறு தேர்தலுக்கு வழிவகுத்துள்ளது.

அத்தொகுதி தேர்தலில் ஊழல் நடந்துள்ளதையும், அதனால்தான் பிஎன் வேட்பாளர், மஇகா உதவித் தலைவர் சி. சிவராஜா, மே 9 பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றார் என்பதையும் டிஏபி வேட்பாளர் எம் மனோகரன் நிரூபித்துள்ளார் என்று நீதிபதி அஸிஸா நவாவி கூறினார்.

இன்று, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், கேமரன் மலையில் போட்டியிட டிஏபி விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

-பெர்னாமா