யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துகள், சேவியர்

நாடெங்கும் யூபிஎஸ்ஆர் சோதனையில் சிறந்த தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துகள். குறிப்பாக, தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  தேர்வில் சிறந்த முன்னேற்றம் அடைந்து வருவது பாராட்டுக் குறியது. சிலாங்கூரில் 8 ஏ-க்கள் பெற்ற 104 மாணவர்களில் வழக்கம் போல் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி முன்னணியில் உள்ளது. அதில்  25 மாணவர்கள் 8 ஏ-களை பெற்றுள்ளதுடன் மாணவர்கள்  தேர்ச்சி விகிதாச்சாரமும் 2 விழுக்காடு கூடியிருப்பது பாராட்டுக்குரியது.

எல்லா மாணவர்களையும் 8 ஏக்களை பெற்ற மாணவர்களாக உருவாக்க முடியாவிட்டாலும், எல்லா மாணவர்களையும் எல்லாப் பாடங்களிலும் முழு தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்க முடியும், உருவாக்குவது மிக முக்கியமாகும். அப்படிப்பட்ட சேவையை வழங்கும் பள்ளி ஆசிரியர்களின் பணியும் வெகுவாகப் பாராட்ட வேண்டிய ஒன்றேயாகும் என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

நமது மாணவர்களின் மேம்பாட்டுக்கு ஆசிரியர்கள் கடுமையாகப் பாடுபடுகின்றனர் என்பதற்கு, சமீபக் காலமாகப் பல அறிவியல் போட்டிகள் உட்பட விளையாட்டு மற்றும் கல்வியிலும் மேம்பாடும், வெற்றிகளும் கண்டு வரும் நமது மாணவர்களே நல்ல சான்றாகும். தங்கள் மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்கச் சில தமிழ்ப்பள்ளிகளில் பிரத்தியேகமாக சீன மேண்டரின் மொழியைக்கூடக் கற்பிக்கின்றது பாராட்டுக்குரியது.

நாட்டில் உள்ள எல்லாத் தமிழ்ப்பள்ளிகளும் சிறந்த அடைவுநிலையை எட்ட வேண்டும், அப்போதுதான் அது இந்தியப் பெற்றோர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும், தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்த்தும், சிறந்த தேர்ச்சி விகிதமும் பெரும் உதவியாக இருக்கும் என்பதால் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி வாரிய உறுப்பினர்களும் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்.

நமது பள்ளிகளின் கல்வி  அடைவு நிலையை மேலும் உயர்த்திக்  காட்டவும், மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக ஆக்கவும் அரசாங்கமும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. அடுத்த ஆண்டில் முடிவுபெறும் என எதிர்பார்க்கப்படும் மாணவர் தங்கும் விடுதி திட்டமும், இவ்வாண்டில் நம் மாணவர்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ள தங்கும் விடுதி வசதிகொண்ட மாரா இளநிலை அறிவியல் கல்லூரி திட்டங்களும் அடங்கும்.

மாரா இக்கல்லூரிகளில்  சுமார் 700 மாணவர்களுக்கு மட்டுமே இடம் ஒதுக்கியுள்ளதால், குறைந்தது 3 ஏ-களை பெற்றுள்ள வசதியற்ற அல்லது ஏழைக் குடும்ப மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெற முன்வரவேண்டும் என டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.