பூமிபுத்ராக்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பதை அடிப்படையாகக் கொண்ட கட்சி பெர்சத்து. ஆகவே அது ஓர் இனவாதக் கட்சி என்பதை அக்கட்சியின் தலைவர் டாக்டர் மகாதிர் ஒப்புக்கொள்கிறார்.
இருப்பினும், அக்கட்சி இன-அடிப்படையற்ற கட்சிகளுக்கு, பிகேஆர், அமனா மற்றும் டிஎபி போன்ற கட்சிகளுக்கு, எதிரானதல்ல என்பதை அவர் வலியுறுத்தினார்.
பெர்சத்து ஒரு இனவாதக் கட்சி என்பது எங்களுக்குத் தெரியும், அது பூமிபுத்ராக்களுக்கு, மலாய்க்காரர்கள் உட்பட, மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளது என்று அவரை மேற்கோள் காட்டி அஸ்டிரோ அவானி நேற்றிரவு கூறியது.
நேற்று, பிரதமர் சரவாக் பெர்சத்துவைத் தொடக்கி வைத்த போது இவ்வாறு கூறினார்.
பெர்சத்துவின் உறுப்பியம் பூமிபுத்ராக்களுக்கு மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், பூமிபுத்ராக்கள் அல்லாதவர்கள் பங்காளி உறுப்பினர்களாக சேர்ந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் கட்சித் தேர்தல்களில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மகாதிர் விளக்கம் அளித்தார்.
பெர்சத்து விதித்துள்ள இக்கட்டுப்பாட்டிற்கு காரணம் பூமிபுத்ராக்கள் மட்டுமே அவர்களுடைய சொந்த உரிமையைத் தற்காத்துக்கொள்ள முடியும் என்று கூறிய மகாதிர், பூமிபுத்ராக்கள் அவர்களுடைய தற்போதைய வாழ்வாதாரத் தரம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பதை உணர்ந்துள்ளனர் என்றார்.
அதனால்தான் பூமிபுத்ரா மட்டுமே அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு போராட முடியும் என்று அவர்கள் இன்னும் நினைக்கின்றனர் என்று மகாதிர் கூறியதாக சொல்லப்படுகிறது.
பெர்சத்து 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் நோக்கம் அம்னோவை வீழ்த்துவதாகும். மகாதிர் அம்னோவின் தலைவராக 22 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளார்.