கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், யுஎஸ்ஜே 25-இல் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கோவில் சம்பவம் தொடர்பாக, 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நான்கு புலனாய்வு ஆவணங்களைப் போலிஸ் திறந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய செய்திகள் தொடர்பில், தாங்கள் பெற்ற போலிஸ் புகார்களைத் தொடர்ந்து 4 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டதாக, சிலாங்கூர் காவல்துறை தலைவர் மஸ்லான் மன்சோர், இன்று ஷா ஆலமில் தெரிவித்தார்.
“பாப்பா கோமோ அல்லது அவரின் உண்மையான பெயர் வான் முஹம்மட் அஸ்ரி வான் டெரிஸ் எனும் வலைப்பதிவாளர், நேற்று மதியம் 1 மணிக்கு, செப்பாங் போலிஸ் தலைமை அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்,” என்று அவர் கூறினார்.
மேலும், நாட்டில் பல்லின மக்களின் ஒற்றுமையை குழைக்க விரும்பும், தீங்கிழைக்கும் நோக்கோடு செயல்படும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மஸ்லான் நினைவுபடுத்தினார்.
கோவிலைப் புதிய இடத்திற்கு மாற்றுவதில் ஏற்பட்ட சர்ச்சையில், தீயணைப்பு வீரர் முகம்மட் ஆடிப் முகமது காசிம் கடுமையான காயத்திற்கு ஆளாகி, தற்போது தேசிய இருதய மருத்துவமனையில் (ஐஜேஎன்) சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்தில், கலகக்காரர்களால் ஒரு போலீஸ்காரர் காயமடைந்ததோடு, 23 வாகனங்கள் எரிக்கப்பட்டன, ஒரு கட்டடம் சேதமாக்கப்பட்டது, பொது ஒழுங்கிற்கும் தொந்தரவு ஏற்பட்டது.
-பெர்னாமா