உள்துறை அமைச்சர், முகைதின் யாசின், நாளை கோலாலம்பூரில் நடைபெறவுள்ள பேரணியில், இனவெறி தூண்டும் வகையிலான எந்தவொரு அறிக்கையையும் வெளியிட வேண்டாம் எனப் பெர்காசா பிரிபூமி அமைப்பிற்கு (பெர்காசா) நினைவுறுத்தியுள்ளார்.
“பொது ஒழுங்கிற்குக் கேடு விளைவிக்கும் அல்லது இன உறவுகளில் பதட்டத்தை ஏற்படுத்தும் எந்தவொரு அறிக்கையையும் நடவடிக்கையையும் தவிர்க்கவும்.
“இப்பேரணி அமைதியுடன், சட்டவிதிகளைப் பின்பற்றி நடப்பதை உறுதிசெய்ய, காவல்துறை இந்தக் கூட்டத்தைக் கண்காணிக்கும்.
“சட்டத்தை மீறும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆண்டு பொதுக் கூட்டத்தை முன்னிட்டு, ‘பெர்ஹிம்புனான் ஜிஹாட் பெர்காசா’ எனும் பேரணியை நடத்தவுள்ளதாகவும், அதில் நாடு முழுவதிலும் இருக்கும் பெர்காசா தலைவர் இடம்பெருவார்கள் என்றும் பெர்காசாவின் தலைமைச் செயலாளர், ஷேட் ஹஸ்சான் ஷேட் அலி கூறியிருந்தார்.
தற்போதையச் செய்திகளைப் பரப்புவதற்காக ஏற்பாடாகி இருக்கும் அப்பேரணியில், 1,000-க்கும் அதிகமான பெர்காசா உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்று மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.
அண்மையில், மலேசியாவில் உள்ள பல இன சமூகத்தில் கவலையை ஏற்படுத்திய, சீஃப்பீல்ட், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த சம்பவத்தைப் பெர்காசாவுக்கு முகைதின் நினைவுபடுத்தினார்.
“எனவே, தற்போது கட்டுப்பாட்டில் இருக்கும் சூழ்நிலையைக் கெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருப்பது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பு,” என்று அவர் கூறினார்.
ஐசெர்ட்டை அங்கீகரிப்பதற்கான முயற்சிகளை எதிர்த்து, அம்னோ மற்றும் பாஸ் கோலாலம்பூரில் நடத்தவுள்ள பேரணிக்கு, ஒரு வாரத்திற்கு முன்னதாக பெர்காசா கூட்டம் நடத்தப்பட்டது.