அம்ப்ரின்: 1எம்டிபி அறிக்கை மீது எல்லாவற்றையும் நாளை விளக்குவேன்

1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கை மாற்றப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து நாளை பொதுக் கணக்குக் குழு(பிஏசி)வைச் சந்திக்கையில் விவரமாய் விளக்கப் போவதாக முன்னாள் தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங் கூறினார்.

“டிசம்பர் 4-இல்(நாளை) முழுக் கதையையும் சொல்வேன். எல்லாவற்றையும் விளக்குவேன். அதன்பின் அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்”, என்று அம்ப்ரின் கூறியதாக இன்று நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சில் செய்தி வெளிவந்துள்ளது.

முதன்முதலாக அக்டோபர் மாதத்தில் பிஏசி துணைத் தலைவர் வொங் கா வோ 1எம்டிபி அறிக்கை மாற்றப்பட்டுள்ளதாகக் கூறியபோது அம்ப்ரின் அதை மறுத்தார்.

ஆனால், அம்ப்ரினுக்குப் பின்னர் அவரது பதவியை ஏற்ற மதினா முகம்மட் அறிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டது உண்மைதான் என்றார்.

மதினா ஓர் அறிக்கையில், 1எம்டிபி மீதான தேசிய கணக்காய்வுத் துறையின் அறிக்கையில் மாற்றங்கள் செய்யும்படி பணிக்கப்பட்ட குறைந்தபட்சம் இரண்டு கூட்டங்களில் அம்ப்ரினும் கலந்து கொண்டார் என்றார்.

மாற்றங்கள் செய்யுமாறு கூறும் முதல் உத்தரவு அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

திருத்தப்பட்ட அறிக்கைதான் புலன் விசாரணைக்காக போலீசிடமும் எம்ஏசிசி-இடமும் கொடுக்கப்பட்டதாக மதினா தெரிவித்தார்.

நாளை அவரும் பிஏசி-யைச் சந்தித்து அது தொடர்பாக விளக்கமளிப்பார்.