மலேசிய வரலாற்று நூல்களில் 1எம்டிபி விவகாரத்தையும் சேர்த்துக்கொள்ள ஆவன செய்யப்படும், அப்போதுதான் அது போன்ற தவறு எதிர்காலத்தில் நடக்காது என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் கூறினார்.
“அரசியல்வாதிகள் (நாட்டின் வளத்தைக்) கொள்ளையடிப்பதற்காக செய்த குற்றச் செயல்கள் எல்லாம் பதிவு செய்யப்படும்”. இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மஸ்லி அவ்வாறு கூறினார்.
ஆனால், பள்ளிகளில் வரலாற்றுப் பாடத்தைத் திருத்தி அமைக்க தம் அமைச்சு மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி விவரித்த மஸ்லி, 1எம்டிபி ஊழல் பள்ளிப் பாடத் திட்டத்திலும் இடம்பெறுமா என்பதைக் கூறவில்லை.
இது குறித்து டிவிட்டரில் கருத்துரைத்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மஸ்லியும்கூட விரைவில் வரலாறு ஆகி விடுவார் என்று கிண்டலடித்தார்.
“அரசியல் பேசுவதற்கு இடமிருக்கிறது, காலமிருக்கிறது. பள்ளிக்கூடம் அதற்கான இடமல்ல.
“பிள்ளைகளை விட்டு விடுங்கள் அவர்களின் எதிர்காலத்தை வீணாக்கி விடாதீர்கள்”, என்று டிவிட் செய்திருந்தார்.