கேமரன் மலை தேர்தல் ஊழல், எம்ஏசிசி விசாரணையைத் தொடங்கியது

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), மே 9 பொதுத் தேர்தலின் போது, பஹாங், கேமரன் மலையில் நடந்த தேர்தல் ஊழல்களை விசாரிக்க தொடங்கியுள்ளது.

விசாரணை ஆவணம் திறக்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால் அதில் மிகக் குறைந்த தகவல்களே இருப்பதாகவும், துணைத் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி கூறியுள்ளதாக என்.எஸ்.தி. வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“விசாரணை தொடங்கியுள்ளது, ஆனால் விசாரிக்கப்படுவது யார் என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. விசாரணையில் ஏதாவது புதிய தகவல்கள் இருந்தால், பிறகு அறிவிப்போம்,” என்று அவர் கூறினார்.

கடந்த வெள்ளியன்று, தேர்தல் நீதிமன்றமாக கூடிய கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், கேமரன் மலையில் மஇகா வேட்பாளரின் வெற்றியைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து, பெடரல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய, அத்தொகுதியின் முன்னாள் எம்பி சி சிவராஜ்ஜுக்கு 14 நாட்கள் உள்ளன.

முன்னதாக, கேமரன் மலையில் இடைத்தேர்தல் வந்தால், மஇகா வேட்பாளருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்க உள்ளதாக பாரிசான் நேசனல் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

-ஃப்.எம்.தி.