கடந்த 26 மற்றும் 27 நவம்பரில், பினாங்கு மாநில அரசு மற்றும் பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்க ஏற்பாட்டில், மலேசியத் தமிழ்க்கல்வி தேசிய மாநாடு, பினாங்கு, செப்ராங் ஜெயா, தி லைட் தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
‘புதிய மலேசியாவில் தமிழ்க்கல்வியின் எதிர்காலம்’ எனும் கருப்பொருளில், மொத்தம் 14 அமர்வுகளில், தமிழ்க்கல்வி துறை சார்ந்தவர்களும் தமிழ்ப்பள்ளிகள் பால் நலப்பாடு உடையவர்களும் தங்கள் கட்டுரைகளைப் படைத்தனர்.
நாடு தளுவிய நிலையில் கல்வியாளர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், அரசு சார்பற்ற இயக்கங்களின் பொறுப்பாளர்கள், தமிழ் ஆர்வளர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
முதல் முறையாக, தமிழ்க்கல்விக்காக இதுபோன்றதொரு மாநாடு, மலேசிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக மாநாட்டின் தலைவர் சதிஸ் முனியாண்டி தனது வரவேற்புரையில் கூறினார்.
200 ஆண்டுகளுக்கு முன்னர், நாட்டின் முதல் தமிழ்ப்பள்ளி தோன்றிய மாநிலம் பினாங்கு, எனவே, இந்த முதல் தமிழ்க்கல்வி மாநாட்டை ஏற்று நடத்த, சிறந்த இடம் பினாங்குதான் என்று அவர் சொன்னார்.
சுதந்திரம் அடைந்தபோது, நாட்டில் இருந்த 888 தமிழ்ப்பள்ளிகளில், தற்போது எஞ்சியிருப்பது 524 பள்ளிகள் மட்டுமே என்று அவர் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.
“364 தமிழ்ப்பள்ளிகள் இந்த 61 ஆண்டுகளில் காணாமல் போய்விட்டன, யாரையும் குறிப்பிட்டு குறைசொல்ல நான் எண்ணவில்லை, ஆனால் இது நிதர்சன உண்மை.
“இனி இந்தப் பக்காத்தான் ஹராப்பான் புதிய அரசாங்கத்தின் நிர்வாகத்தில், நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா இல்லை குறையுமா? தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளதைப் போன்று, தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து, அதற்கொரு சரியான தீர்வு காணவே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
மேலும், மலேசியாவில் முதன் முறையாக, தமிழ்ப்பள்ளிகளுக்கு மாநில வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்தது பினாங்கு மாநிலம்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
“பினாங்கு மாநில வரவு செலவு திட்டத்தில், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் RM1.75 மில்லியனும் தமிழ்ப்பள்ளிகளில் இயங்கும் பாலர் பள்ளிகளுக்காக RM 200,000 ஒதுக்கப்படுகிறது.
“அதுமட்டுமின்றி, தமிழ் இடைநிலைப் பள்ளிக்காக நிலம் ஒதுக்கிய முதல் மாநிலம், பினாங்கு மாநில அரசாங்கம் ஆகும்,” என்று அவர் கூறினார்.
இவற்றிற்கெல்லாம், மூலகாரணமாக இருப்பது மாநிலத்தின் 2-ம் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராசாமி என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் கல்வி அமைச்சின் பொறுப்பாளர்கள், மாநாட்டின் தீர்மானங்களைக் கல்வி அமைச்சுக்குக் கொண்டு செல்ல வேண்டும். 60 ஆண்டுகளில் நிறைய இழந்துவிட்டோம், அவற்றை மீண்டும் பெறுவதற்கு இன்னும் 60 ஆண்டுகள் காத்திருக்க முடியாது என்று சொல்லவே இந்த மாநாடு,” என்று சதிஸ் வலியுறுத்தினார்.
மாநாட்டைத் தொடக்கி வைக்க வருவதாக இருந்த, பிரதமர் துறை இலாகாவின், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பி வேதமூர்த்தி, இறுதி நேரத்தில் வரமுடியாமல் போன காரணத்தால், கல்வி அமைச்சரின் பிரதிநிதி, டாக்டர் ஜி மணிமாறன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, கல்வி அமைச்சரின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார்.