சீபீல்ட் தோட்ட கோவிலை நிலைநிறுத்தக் கோடீஸ்வரர்கள் நன்கொடை

 

சுபாங் ஜெயா சீபீல்ட் தோட்ட ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்தக் கோடீஸ்வரர் வின்சன்ட் டானுடன் நீர், நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மற்றும் சுமார் 200 பொது மக்களும்  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்குச்  சீபில்ட் மகா மாரியம்மன்  ஆலயத்திற்கு வருகை புரிந்தனர்.

அதில் பேசிய  அமைச்சர் கடந்த ஒரு வாரமாக, நாட்டில் மிக உணர்ச்சிகரமான சம்பவமாக விவாதிக்கப்படும் இவ்வாலய விவகாரம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது குறித்து,  தனது அலுவலகம், மந்திரி புசார் அலுவலகம் மற்றும்  கோடீஸ்வரர் வின்சன்ட் டானும் நில உரிமையாளரான பிலிப்பின் நாட்டின் அய்யாலா கார்ப்பரேஷனுடன்  தொடர்பு கொண்டும் விவாதித்து வருவதாக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில்  இருப்பதாலும், ஏற்கனவே எல்லாத் தரப்புகளும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அமல் படுத்தும் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்து திட்டுள்ளதால், இப்பொழுது அதை மீறிச் செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர்நோக்க நேரிடும்  என்று அவர் எச்சரித்தார். அதனால், அமைச்சர் பிலிப்பைன்ஸ் நாட்டின் அ ய்யாலா கார்ப்பரேஷனின் செயல்முறை அதிகாரியுடன் அந்த வழக்கை வாபஸ் பெறப் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அந்த வழக்கை  நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெறுவதிலும், அந்நிறுவனம் மேம்பாடு குறித்துச் சமர்ப்பித்துள்ள உத்தேசத் திட்ட வரைவையும் திரும்பப் பெற்று அதிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும், அவை  அனைத்தும் சில காலம் பிடிக்கக்கூடிய செலவு மிக்க பணிகளாகும் என்றார்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

தொடர்ந்து பேசிய கோடீஸ்வரர் வின்சன்ட் டான், மலேசியா ஒரு நல்ல நாடு, அனைவரும் நீண்ட காலம் ஒற்றுமையாக வாழ்ந்து நாட்டை மேம்படுத்தி உள்ளோம். சிறு பிணக்குகளுக்காக நாட்டை எரிப்பது உகந்த செயல் அல்ல என்பதைச் சில மத்தியக் கிழக்கு நாடுகளில் நடக்கும் போராட்டங்களையும்  அங்கு மக்கள் படும்பாட்டையும், கவனத்தில் எடுத்துக் கொண்டால் புரியும் என்றார்  அவர்.

இன்றைய ஆட்சி மாற்றமும், தனது 93 வது வயதில் நாட்டை நன்னெறிப் படுத்த முயலும் ஒரு முதியவர் துன் டாக்டர் மகாதீர் முகமது. அவர் முயற்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய கோடீஸ்வரர் வின்சன்ட் டான், எல்லாவற்றுக்கும் நல்ல தீர்வு காண முடியும் என்றார். ஆலயம் வீற்றிருக்கும் ஓன் சிட்டி நிறுவனத்தின் பெரிய பங்குதாரர் பிலிப்பைன்ஸ் நாட்டின் அய்யாலா கார்ப்பரேஷன், அந்நாட்டில் புகழ் பெற்ற நிறுவனம் என்பதோடல்லாமல், மக்கள் நலன் திட்டங்கள் பலவற்றை மேற் கொண்டுவரும் ஒரு நிறுவனம் ஆகும் என்றார் அவர்.

இந்த ஆலய நில விவகாரத்துக்குத் தீர்வு காண அதன் ஒத்துழைப்பைப் பெற அந்த நிறுவனத்தின் தலைவரிடம் பேச தான் முயன்று வருவதாகவும் குறிப்பிட்டார். ஆலயத்திற்கு இந்த நிலத்தை வாங்கி விட்டால் இந்த விவகாரத்துக்குத் தீர்வு பிறக்கும் என்ற அவர் இப்பொழுது தனது பங்கிற்கு ரிங்கிட் 5 லட்சம், பி.ஜி.எம்.சி நிறுவனர் டான் ஸ்ரீ ப்பேரி கோ, நிருவனா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் டான் ஸ்ரீ டேவிட் கோங் மற்றும் அவ்வாலயப் பக்தர் என்று மட்டும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட டத்தோ ஆனந்குமார் அழகு ஆகியோர் தலா 5 லட்சம் வெள்ளிகளை வழங்கவும் ஒப்புகொண்டுள்ளதாக அவர்  அறிவித்தார்.

பக்தர்களும், பொதுமக்களும் தங்கள் பங்கை செலுத்தும் வண்ணம் சன் மீடியா நிறுவனம் ஒரு வங்கிக் கணக்கைத்  தொடங்கியுள்ளது, அதற்கு ஸ்டார் பத்திரிக்கை குரூப்பும் ஆதரவளிக்கிறது என்றார். அவர் புத்த மதத்தவராக இருந்தாலும் மற்ற மத வழிபாட்டு மையங்களில் வழிபடத் தயங்கியதில்லை. இதுவே மலேசியர்களின் சிறப்பு, நாம்  அனைவரும் எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாடுகளில் வளர்ந்து விட்டோம். அதனை நாம் தொடர்ந்து பேணிக் காக்க வேண்டும் என்றார் வின்சன்ட் டான்,