ஜொகூர் மாநிலப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், 2019 வரவு செலவு திட்டத்தில் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது, இந்தியர்கள் மீது அக்கூட்டணிக்கு அக்கறை இல்லை என்பதையேக் காட்டுகிறது எனும் குற்றச்சாட்டை, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
பாரிசான் நேசனல் ஆட்சியின் போது, இந்தியச் சமூகத்திற்கு 8 மில்லியன் ஒதுக்கப்பட்டது, ஆனால் இப்போது ஹராப்பான் ஆட்சியில் 3 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதைக் சுட்டிக்காட்டி, காஹாங் சட்டமன்ற உறுப்பினர் மக்களைப் பயமுறுத்துவதாக அவர் சொன்னார்.
“அடுத்தாண்டுக்கான மாநிலப் பட்ஜெட்டில், தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுக்கு 1.5 மில்லியன், சமூகநலத் திட்டங்களுக்கு 1 மில்லியன் மற்றும் தொழில் முனைவோர்க்கான திட்டங்களுக்கு 0.5 மில்லியன் என மொத்தம் 3 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது உண்மைதான்.
“ஹராப்பான் அரசாங்கம் இன அடிப்படையில் அல்லாமல், தேவை அடிப்படையிலேயே இந்தப் பட்ஜெட்டை வடிவமைத்துள்ளது,” என்று இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இருப்பினும், தேவை அடிப்படையில் தங்களால் 100 விழுக்காடு செயல்பட முடியாமல் இருப்பதற்கு, இன அரசியல் நடத்தும் சிலரின் நடவடிக்கைகள்தான் காரணம் என, இன்று மாநிலச் சட்டமன்ற அமர்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்தார்.
“எங்களால் முழுமையாக தேவை அடிப்படையில் செயல்பட முடியவில்லை, குறிப்பாக எங்களின் இலக்கு பி40 பிரிவினர், ஆனால் நாங்கள் அவர்களை இலக்கு வைத்து திட்டம் தீட்டும் போது, கஹாங் சட்டமன்ற உறுப்பினர் போன்ற சிலர், இன அரசியலைத் தூண்டிவிட்டு, மக்களைப் பயமுறுத்துகின்றனர்.
“இத்தனை ஆண்டுகளாக, இன வாரியாகவே ஒதுக்கீடுகளைப் பார்த்துவிட்ட மக்களை, உடனடியாக மாற்றுவது சற்று சிரமமே. ஆனால், தற்போது மக்கள் அதனைப் புரிந்துகொள்ள தொடங்கிவிட்டனர்.
“நாங்களும் எங்களின் திட்டங்களை, அதற்கேற்றார் போலதான் வடிவமைக்க முடியும்,” என பெக்கோ சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மனித மூலதனத் திறன் பிரிவின் கீழ், திறன் அடிப்படையிலான பயிற்சிகளுக்கு 5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1.5 மில்லியன் ரிங்கிட் இந்தியர்களுக்கும், 1.5 மில்லியன் மற்றும் 2 மில்லியன் முறையே ஃபெல்டா இளைஞர்களுக்கும் பொதுவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி, ‘அஸாம் கெர்ஜா’ திட்டத்தின் கீழ், தொழில் திறன் வாய்ந்த பி40 பிரிவினர், தங்கள் தொழிலுக்குத் தேவையான கருவிகளை வாங்க முடியும். இந்தியர்கள் இந்த வாய்ப்பினையும் பயன்படுத்தி கொள்ளலாம் என அவர் மேலும் சொன்னார்.
‘பங்சா ஜொகூர்’ என்ற அடிப்படையில், ஜொகூர் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால், அது அனைவருக்கும் பலனளிக்கும், இன்னும் இனவாரியான ஒதுக்கீடுகளை எதிர்பார்க்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இம்முறை இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைய காரணம் என்ன என்று கேட்டதற்கு, “தற்போதய நிதி நிலைதான் முக்கிய காரணம்,” என்று அவர் கூறினார்.
“அதுமட்டுமின்றி, நாங்கள் இன ரீதியாக இல்லாமல், தேவை அடிப்படையிலேயே இந்தப் பட்ஜெட்டை வரைந்துள்ளோம். இந்தப் பட்ஜெட், தனியோர் இனத்திற்கு என்றில்லாமல், அனைத்து பி40 மக்களுக்கும் நன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்,” என்று இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.