மாபுஸ்: பேரணி தேவையில்லை, பணத்தைப் பள்ளிப் பிள்ளைகளின் செலவுக்குப் பயன்படுத்தலாம்

அமனா எம்பி மாபுஸ் ஒமார், ஐசெர்ட்- எதிர்ப்புப் பேரணிக்கு ஏற்பாடு செய்வோருக்கு நிதி நிர்வாகம் குறித்து சில ஆலோசனைகளை வழங்கினார்.

அரசாங்கம் ஐசெர்ட் -டில் கையொப்பமிடுவதில்லை என்று முடிவு செய்து விட்டதால் கோலாலும்பூரில் டிசம்பர் 8-இல் பேரணி நடத்த வேண்டிய அவசியமே இல்லை என பொக்கோக் சேனா எம்பி கூறினார்.

“அவர்கள் (அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு முரணாக) அறிக்கை வெளியிட்ட ஒன்றிரண்டு அமைச்சர்களைக் குறை சொல்வதாக இருந்தால் அந்த அமைச்சர்களைச் சந்தித்துக் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

“பேரணி நடத்தாமலிருந்தால் பேருந்துகள், தங்குவிடுதிகள் போன்றவற்றுக்குச் செலவிடும் பணம் மிச்சமாகும்.

“புதிய பள்ளித் தவணை தொடங்கப் போகிறது. பள்ளிப் பிள்ளைகளின் செலவு இருக்கிறது”, என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் மாபுஸ் கூறினார்.

முன்னாள் பாஸ் உதவித் தலைவரான மாபுஸ், இவ்விவகாரத்தில் பாஸ் கட்சி அம்னோவுடன் ஒத்துழைப்பதுதான் வேடிக்கை என்றும் கிண்டலடித்தார். முன்பு அம்னோ, பசிபிக் நாடுகள் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் (டிபிபிஏ) கையொப்பமிட்டபோது அது மலாய்க்காரர் நலனைப் பாதிக்கும் என்று இதே இஸ்லாமிய கட்சிதான் எதிர்ப்பு தெரிவித்தது.

“இப்போது பாஸ் அவர்களோடு(அம்னோ) ஒத்துழைக்கிறது. வேடிக்கைதான்”, என்றார்.

இதனிடையே, அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, திட்டப்படி பேரணி நடக்கும் என்றார். பேரணிக்கு இனப் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் கிடையாது.

“ஐசெர்ட்-ட்டை அங்கீகரிப்பதில்லை என்ற அரசாங்க முடிவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கவும் நன்றி தெரிவிக்கவும்தான் இப்பேரணி”, என்றவர் சொன்னார்.