நஸ்ரி ஐசெர்ட்-எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள மாட்டார், அரசாங்க முடிவில் அவருக்குத் திருப்தி

பிஎன் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அசீஸ், சனிக்கிழமை கோலாலும்பூரில் நடைபெறும் எல்லாவகை இனப் பாகுபாட்டுக்கும் எதிரான அனைத்துலக ஒப்பந்தம் (ஐசெர்ட்) தொடர்பான பேரணியில் கலந்துகொள்ள மாட்டார்.

அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கப் போவதில்லை என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பது முழுத் திருப்தி அளிப்பதாக அந்த அம்னோ எம்பி கூறினார்.

“அதற்கு நான் போக மாட்டேன். அந்த ஒப்பந்தத்தை அரசாங்கம் அங்கீகரிக்கக்கூடாது என்று விரும்பினேன். அது நடந்துள்ளது. அது போதும் எனக்கு”, என்றவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பேரணியில் கலந்துகொள்வதில்லை என்பது தம் சொந்த முடிவு என்றும் அவர் சொன்னார்.

இனப் பதற்றத்தை உண்டுபண்ணலாம் என்று கருதப்படும் அப்பேரணி அம்னோ, பாஸ் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

முதலில் அரசாங்கம் ஐசெர்ட்-டில் கையொப்பமிடுவதை எதிர்ப்பதற்காகத்தான் அப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. அரசாங்கம் ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதில்லை என்று முடிவு செய்ததும் அரசாங்க முடிவைக் “கொண்டாடும்” கூட்டமாக அது நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.