அபாண்டியும் கந்தாவும் பிஎசியால் அழைக்கப்படுவர்

 

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவிடம் (பிஎசி) விளக்கமளிக்க விரைவில் அழைக்கப்படவிருக்கும் சிலரில் சட்டத்துறை முன்னாள் தலைவர் முகம்மட் அபாண்டி அலியும் ஒருவர்.

1எம்டிபி கணக்காய்வு அறிக்கை குறித்து அழைக்கப்படவிருக்கும் இன்னும் மூவரில் 1எம்டிபி முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, எம்எசிசி முன்னாள் தலைமை ஆணையர் டிசுல்கிப்ளி அஹமட் மற்றும் அரசாங்க முன்னாள் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா ஆகியோர் அடங்குவர் என்று பிஎசியின் தலைவர் ரோனல்ட் கியன்டி கூறினார்.

இன்று பிஎசியிடம் பேசிய முன்னாள் தலைமைக் கணக்காய்வாளர் அம்பிரின் புவாங் மீண்டும் அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றாவர்.

இந்த நால்வரைத் தவிர்த்து, இன்னும் ஐந்து அல்லது பேர் விசாரணைக்காக அழைக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

நாங்கள் 1எம்டிபி விசாரணை பற்றிய விபரங்களைத் தேடப் போவதில்லை. 1எம்டிபி அறிக்கையில் சட்டவிரோதமான மாற்றங்கள் செய்யப்பட்டனவா இல்லையா என்பததைத் தெரிந்து கொள்வதுதான் என்று ரோனல்ட் (படம்) நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தற்போதைய தலைமைக் கணக்காய்வாளர் மதினா முகமட் மற்றும் அரசாங்க கணக்காய்வுத்துறை முன்னாள் இயக்குனர் ஷாடாதுல் நாபிஷா ஆகியோரை பிஎசி நாளை சந்திக்கவிருக்கிறது.

இச்சந்திப்பு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 1எம்டிபி மீதான கணக்காய்வு இலாகாவின் அறிக்கையில் திருத்தம் செய்ய உத்தரவுகள் பிறப்பித்தார் என்று மதினா கூறியிருந்த குற்றச்சாட்டுகள் பற்றியதாகும் என்று ரோனல்ட் மேலும் கூறினார்.