பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் , வரும் சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் மனித உரிமை ஆணைய(சுஹாகாம்)த்தின் 2018 மனித உரிமை தின நிகழ்வைத் தொடக்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மலேசிய பிரதமர் ஒருவர் சுஹாகாமின் மனித உரிமை தின நிகழ்வில் கலந்து கொள்வது அதுவே முதல் முறையாக இருக்கும். மகாதிர் ஆட்சியில்தான், 1999-இல், அமைக்கப்பட்டது அந்த ஆணையம்.
சுஹாகாமின் நிகழ்வு காலை மணி 8-இலிருந்து பிற்பகல் மணி 3வரை பாடாங் தீமோர் திடலில் நடைபெறும். மனித உரிமை நிகழ்வு திறந்த வெளியில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
அங்கு “Perjuangan yang belum selesai” (முடிவடையாத போராட்டம்) என்ற தலைப்பில் ஒரு நாடகம், பாரம்பரிய நடனங்கள், காணொளிப் போட்டி எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடாங் தீமோரில் மனித உரிமை தின நிகழ்வு நடைபெறும் அதே நாளில் அதற்கு 10கி.மீ. வடக்கே டட்டாரான் மெர்டேகாவில் எல்லா வகை பாகுபாட்டுக்கும் எதிரான அனைத்துலக ஒப்பந்த(ஐசெர்ட்) எதிர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது.
அந்நிகழ்வுக்கு 500,000 பேரைத் திரட்டிக் கொண்டு வர ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மகாதிர் நிர்வாகம் ஐசெர்ட்டை அங்கீகரிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே கூறி இருந்தும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்காத 17 உலக நாடுகளில் ஒன்றாகவும் இரண்டு ஓஐசி (இஸ்லாமிய நாடுகள் நிறுவனம்) நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.