ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ‘விடுமுறையா’, அன்வாருக்கு உடன்பாடில்லை

டிசம்பர் 9 பேரணியில் கலந்துகொள்வோருக்கு வசதியாக கிளந்தான் அரசு ‘சிறப்பு விடுமுறை’ அறிவித்திருப்பதில் அன்வார் இப்ராகிமுக்கு உடன்பாடில்லை.

அனைத்து வகை பாகுபாடுகளுக்கும் எதிரான அனைத்துலக ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதில்லை என்ற புத்ரா ஜெயா முடிவைக் கொண்டாடுவதற்காக அப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் அது பூமிபுத்ராக்களின் சலுகைகள் பறிக்கப்படுவதற்கு வழிகோலும் என்பது அந்த ஒப்பந்தத்தை எதிர்ப்போரின் வாதம்.

தெரு ஆர்ப்பாட்டம் ஒன்றும் அன்வாருக்குப் புதிதல்ல. அவரே, இந்த நோக்கத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்.

“இது என் கருத்து. ஆர்ப்பாட்டம் செய்வதற்காக விடுமுறை அளிப்பது முறையல்ல என்று நினைக்கிறேன்”, என பிகேஆர் தலைவர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அம்னோவும் பாஸும் ஏற்பாடு செய்துள்ள அப்பேரணியில் தாம் கலந்துகொள்ள எந்தக் காரணமும் இல்லை என்றும் அன்வார் கூறினார்.

ஐசெர்ட் ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதில்லை என்ற அரசாங்கத்தின் முடிவை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேரணியில் கலந்துகொள்ள ஏற்பாட்டாளர்கள் அன்வாரையும் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டையும் அழைத்திருப்பதாக மலேசியாகினி நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.