சுவாராம் நிர்வாக இயக்குநரிடம் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் விசாரணை

சுவாராம் நிர்வாக இயக்குநர், சிவன் துரைசாமி, தேச நிந்தனை சட்டம் 1948-ன் கீழ் போலிசாரால் விசாரிக்கப்பட்டார்.

வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான, ஃபாடியா நட்வா ஃபிக்ரி எழுதிய, அரச நிறுவனத்திற்கு எதிரான ஒரு கட்டுரை தொடர்பில், தான் விசாரிக்கப்பட்டதாக, இன்று பிரிக்ஃபீல்ட்ஸ், போலிஸ் தலைமையகத்தில், விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிவன் தெரிவித்தார்.

சிவன் ஆலோசகராக பணியாற்றும், ‘மலேசிய முடா’ எனும் இளைஞர் குழுவின் இணையதளத்தில், கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஃபாடியா -இன் கட்டுரை தொடர்பில் விளக்கமளிக்க அழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

செக்‌ஷன் 4 (1) தேச நிந்தனை சட்டத்தின் கீழ் தான் விசாரிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

“கட்டுரையின் நோக்கம் தெளிவாக உள்ளது என நான் நம்புகிறேன், மிகவும் திறந்த கட்டுரை அது, அரசியல்வாதிகளைப் பொதுமக்களிடம் நெருங்கி வர கேட்டுக்கொண்டது அக்கட்டுரை.

இந்த வழக்கை விசாரிக்க, போலிசார் நேரத்தையும் பொருளையும் வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய சிவன், இச்சட்டத்தைப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஒழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“அரசாங்கம், தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தி, விசாரணை செய்யும் கடைசி வழக்காக இது இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்,” என்றார் அவர்.

போலிஸ் விசாரணைக்காக, ஃபாடியா மீண்டும் அழைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஜூலை 9-ம் தேதி, ‘மலேசியா முடா’ வலைத்தளத்தில், “உன்னை அடிபணியச் செய்யும் கைகளை முத்தமிடாதே” (டோன்ட் கிஸ் தி ஹேன் தாட் பீட் யூ) என்ற தலைப்பில், பிகேஆர் தலைவர், அன்வார் இப்ராஹிம், ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கைகளை முத்தமிட்டது தொடர்பில் ஃபாடியா கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார்.

அதன் அடிப்படையில், செக்‌ஷன் 4 (1) தேச நிந்தனை சட்டம் மற்றும் செக்‌ஷன் 233 தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ், போலிஸ் ஃபாடியாவை விசாரணைக்கு அழைத்தது.

விசாரணையின் ஒருநாளுக்குப் பின்னர், முதல் விசாரணையின் போது, பிரிக்ஃபீல்ட்ஸ் போலிஸ் தலைமையகத்திற்கு முன்னால், ஃபாடியாவுக்கு ஆதரவளிக்க ஒன்றுகூடிய ஆதரவாளர்கள் குறித்து விசாரிக்க, அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டப் பிரிவு 9 (1) இன் கீழ் சாட்சியமளிக்க, ஃபாடியா மீண்டும் அழைக்கப்பட்டார்.