நாளை பேரணிக்குச் செல்பவர்கள் அமைதியாகவும் குப்பைகள் போடாமலும் இருப்பார்கள், மகாதிர் எதிர்பார்க்கிறார்

 

நாளை கோலாலம்பூரில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பவர்கள் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும், குப்பைகள் போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மகாதிர் வலுயுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

பேரணி ஏற்பாட்டாளர்களிடம் அரசாங்கம் விடுக்கும் ஒரே வேண்டுகோள் இதுதான் என்றாரவர்.

போலீசாருக்கும் அதிகாரிகளுக்கும் பேரணி ஏற்பாட்டாளர்கள் உதவ வேண்டும்; அமைதிக்கு பங்கம் ஏற்படாமலும் பொதுச் சொத்துக்கு கெடுதி ஏற்படாமல் இருப்பதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மகாதிர் அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஐசெர்ட் எனப்படும் ஐநா ஒப்பந்தத்தை எதிர்த்து அம்னோ, பாஸ் மற்றும் பல அரசு சார்பற்ற அமைப்புகள் இந்த பேரணியை நடத்துகின்றன.

நவம்பர் 23-இல், இந்த ஐசெர்ட் ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதில்லை என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஆனால், பேரணி ஏற்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் முடிவைக் கொண்டாடுவதற்காக திட்டமிட்டபடி இப்பேரணி நடைபெறும் என்று கூறுகின்றனர்.

இந்தப் பேரணி அரசாங்கத்திற்கு “நன்றி கூறுவதற்கு” என்றால், அரசாங்கம் அதற்கு பாராட்டு தெரிவிக்கிறது என்றாரவர்.

தமது நிருவாகம் பேரணி ஏற்பாட்டாளர்களைத் தடுக்காது, ஏனென்றால் அது அரசாங்கத்தின் ஜனநாயக கோட்பாடுகளை மீறுவதாகும் என்று மகாதிர் கூறினார்.

இக்கூட்டம் சுமூகமாகவும் சங்கடங்கள் ஏதுமில்லாமலும் நடைபெறுவதற்கு பிராத்திக்கிறேன். மலேசியாவில் ஜனநாயகத்தைக் கொண்டாடுவோம் என்று பிரதமர் மகாதிர் கூறினார்.