பிற்பகல் மணி 4.05: டத்தாரான் மெர்தேக்காவிற்கு மேல் கடும் மழைக்கு அறிகுறியாக மேகம் இருளத் தொடங்கியது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இதர பகுதிகளில் மழை பொழியத் தொடங்கிவிட்டது.
பிற்பகல் மணி 4.25: இப்பேரணி நடத்தப்படுவது மற்ற இனங்களைக் கண்டனம் செய்வதற்காக அல்ல என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ரகிம் கூறினார். இது மலாய்க்காரர்களின் உரிமைகளையும் இஸ்லாத்தை அதிகாரப்பூர்வமான சமயமாக தற்காப்பதற்காகும் என்றாரவர்.
நாங்கள் இங்கு கூடியிருப்பது நாங்கள் சீனர்கள் மற்றும் இந்தியர்களுக்கு எதிரானவர்கள் என்பதால் அல்ல…நாங்கள் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகியோரின் உரிமைகளை எடுத்துக்கொள்வதற்காக அல்ல. நாங்கள் பெடரல் அரசமைப்புச் சட்டத்தைத் தற்காக்கிறோம்.
இதற்குப் பின்னரும், பெடரல் அரசாங்கம் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணானதாக இருக்குமானால், மக்கள் புத்ரா ஜெயாவில் கூடுவார்கள் என்றாரவர்.
நாட்டின் நிலைத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் மிரட்ட வேண்டாம் என்று துவான் இப்ராகிம் அனைத்து தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்தார்.