தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிலாங்கூர் டிஏபி-யின் புதியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த, டிஏபி-யின் தேசியத் துணைத் தலைவராகவும் இருக்கும் அவர், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள, மாநிலக் கட்சி உறுப்பினர்களையும் கட்சித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாகத் கூறினார்.
“கட்சியின் அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, அவர்களின் தேவை என்ன என்பதைக் கேட்டறிவதே என் பிரதான பணியாகும், கட்சியைப் பலப்படுத்தி, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
“தற்போதுள்ள புதியக் குழுவில் நான் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன், நாங்கள் மிகவும் திறமையான குழுவைக் கொண்டுள்ளோம், சிலாங்கூர் டிஏபியை, ஒரு புதிய மட்டத்திற்குக் கொண்டுவர, சிறந்ததை நாங்கள் செய்வோம்,” என்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற சிலாங்கூர் டிஏபி மாநாட்டில், தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
15 பேர் கொண்ட மாநிலச் செயற்குழுத் தேர்தலில், 9-வது இடம் கிடைத்த கோபிந் சிங், சிலாங்கூர் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுவரை சிலாங்கூர் டிஏபி சிறப்பாக செயல்பட, கடினமாக உழைத்த டோனி பூவாவுக்குக் கோபிந்த் பாராட்டு தெரிவித்தார்.
“இப்போது சிலாங்கூர் டிஏபி, மத்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது, இது முற்றிலும் மாறுபட்ட விஷயம். நாம் நிறைய பணிகளைச் செய்ய வேண்டும், அதனை இப்போதே தொடங்க வேண்டும்,” என்று அவர் மேலும் சொன்னார்.
மேலும், சிலாங்கூர் டிஏபி செயலவையில், துணைத் தலைவராக இயான் யோங் ஹியான் வா, உதவித் தலைவர்களாக ங் சூய் லிம் மற்றும் வி கணபது ராவ், செயலாளராக ரோன்னி லியு, பொருளாளராக ங் ஷி ஹான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.