ஏழைகளுக்கு உதவும் வகையில், குறுகிய கால புதிய திட்டங்களை உருவாக்கும்படி, பிரதமர் மகாதிர் நிதியமைச்சர் லிம் குவான் எங்-ஐ கேட்டுக்கொண்டார்.
அடுத்த ஆண்டு, நாட்டின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கலாம், ஆனால் அதுவரை ஏழை மக்களால் காத்திருக்க முடியாது என்று, நேற்றிரவு ‘பிஎச் 208’ நிதிதிரட்டு விருந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் சொன்னார்.
“2019-ல் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள், ஆனால் ஏழைகளுக்கு அதுவரை காத்திருக்க முடியாது, காரணம் வாழ்வாதார செலவினங்கள் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக அவர்கள் உணர்கிறார்கள்.
“அதனால், முந்தைய அரசாங்கத்தால் திருடப்பட்ட ஏழைகளுக்கு, நிதி அமைச்சர் உதவ வேண்டுமென நான் விரும்புகிறேன், எங்களிடம் அதிகப் பணம் இல்லை, ஆனால், இருக்கும் கொஞ்ச பணத்தில் உதவி செய்ய முயற்சிப்போம்,” என்று அவர் கூறினார்.
“15-வது பொதுத் தேர்தலில் – நான் வழிநடத்த மாட்டேன் – நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம், காரணம் நாங்கள் சுத்தமாக இருக்கிறோம், ஆனால் நாம் ஊழலில் ஈடுபட்டால், பக்காத்தான் ஹராப்பானை யார் வழிநடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல, மக்களால் நாம் தோற்கடிக்கப்படுவோம்,” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஹராப்பான் RM1.665 மில்லியனைத் திரட்டியது.