மகாதிர்: பெடரல் அரசாங்கம் ஒரு ‘வெளியாள்’ அல்ல, புலாவ் குகுப் மீது அதற்கு அதிகாரம் இருக்கிறது

பெடரல் அரசாங்கம் ஒரு ‘வெளியாள்’ அல்ல. ஆகையால் அதற்கு ஜொகூரின் புலாவ் குகுப் மீது அதிகாரம் உண்டு என்று பிரதமர் மகாதிர் இன்று கூறினார்.

ஜொகூர் நில விவகாரங்களில் ‘வெளியாள்கள்’ குறுக்கீடு செய்யக்கூடாது என்று ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் கூறியிருந்தது பற்றி கருத்துரைக்குமாறு கேட்டதற்கு பிரதமர் இவ்வாறு கூறினார்.

“மலேசியர்கள் வெளியாள்கள் அல்ல, பெடரல் அரசாங்கம் வெளியாள் அல்ல.

“நாடு முழுவதிலும் நடக்கும் அனைத்திற்கும் நாங்கள் பொறுப்பு”, என்று மகாதிர் புத்ரா ஜெயாவில் இன்று காலை நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

புலாவ் குகுப் ஒரு தேசியப் பூங்காவாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று நீர், நிலம் மற்றும் இயற்கைவளம் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியிருந்ததை துங்கு இஸ்மாயில் நேற்று அவரது முகநூலில் குறைகூறியிருந்தார்.