‘பொறுமையாக இருங்கள், எம்ஏசிசி 3 மாத அவகாசம் கொடுத்துள்ளது’

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனதன் காரணமாக, சொத்துக்களை அறிவிக்க அவருக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வழங்கியுள்ள, மூன்று மாதக் கால அவகாசத்தைத் தான் மீறவில்லை என்றும் அந்தப் போர்ட்டிக்சன் எம்பி சொன்னார்.

“பொறுமையாக இருங்கள் … அவர்கள் (எம்ஏசிசி) எனக்கு மூன்று மாதங்கள் கொடுத்திருக்கிறார், நான் அண்மையில்தான இடைத்தேர்தலில் வென்றிருக்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் மக்கள் பிரதிநிதிகள், பதவி பிரமாணம் எடுத்த 3 மாதங்களுக்குள், தங்கள் சொத்துகளைப் பொதுவில் அறிவிக்க வேண்டியது கட்டாயம்.

கடந்த டிசம்பர் 9-ம் தேதி, பெர்னாமா வெளியிட்ட செய்தியின்படி, 13 ஹராப்பான் தலைவர்கள் இன்னும் தங்கள் சொத்துகளை எம்ஏசிசி-யிடம் அறிவிக்கவில்லை.

அந்த 13 பேரில், பேராக் மந்திரி பெசார் அஹ்மட் ஃபைசால் அஜுமு, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் முகமடின் கெத்தாபி மற்றும் பிரதமர் துறை அமைச்சர் பி வேதமூர்த்தியும் அடங்குவர்.

முன்னதாக, தான் சொத்துகளை அறிவித்துவிட்டதாகவும், ஆனால் அதை இன்னும் எம்ஏசிசி தகவல் அதிகாரிகள் புதுபிக்கவில்லை என்றும் ஃபைசால் கூறியிருந்தார்.

தன்னை “ஏழை” என்று வர்ணித்துக் கொண்ட முகமடின், அறிவிப்பு செய்ய தன்னிடம் சொத்துக்கள் எதுவும் இல்லை என்று கூறிய வேளை; வேதமூர்த்தி ஏற்கனவே தன்னுடைய வருமான ஆதாரத்தை அறிவித்துவிட்டதாகவும், ஆனால் அதில் சொத்துகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.