நாடாளுமன்றம் | மாணவர்கள் உயர்க்கல்வி வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில், பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரி சட்டத்தில் (அவ்கு) திருத்தங்கள் செய்ய, மக்கள் அவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தனியார் உயர்க்கல்வி நிறுவனங்கள் சட்டம் 1996 மற்றும் கல்வி நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 1976 ஆகியவற்றிற்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அவ்கு சட்டத் திருத்தம், உயர்க்கல்வி நிறுவனங்களில் பயமுறுத்தும் கலாச்சாரத்தை இனி ஒழிக்கும் என்று கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் உறுதியளித்தார்.
மேலும், பல்கலைக்கழகங்கள் அரசியல்வாதிகளை – ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி – பல்கலைக்கழகத் துணை சேன்சலரின் ஒப்புதலுடன், இனி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கலாம் என்றும் மஸ்லீ தெரிவித்தார்.
அரசியலில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு எதிராக, தற்போது நடைபெற்று வரும் அனைத்து ஒழுங்குமுறை வழக்குகளும், இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்த பிறகு தொடராது என்றும் அவர் சொன்னார்.
இருப்பினும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இன்னும் சில சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
“மாணவர்கள் இந்தச் சுதந்திரத்தை முழு பொறுப்போடு பயன்படுத்துவர் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
அரசாங்கம், குறிப்பாக கல்வி அமைச்சு, பல்கலைக்கழக நிர்வாகத்தில் இனி தலையிடாது, அங்கே நடக்கும் அரசியல் நடவடிக்கைகளையும் தீர்மானிக்காது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, அவ்கு சட்டத்தை இரத்து செய்து, அதற்குப் பதிலாக 2020-ல் ஒரு புதிய சட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக பக்காத்தான் ஹராப்பான் அறிவித்திருந்தது.
1971-இல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 1975-ஆம் ஆண்டு, அப்போதைய கல்வியமைச்சராக இருந்த டாக்டர் மகாதிர் முகமட், மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்க, அச்சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்தார்.
பிஎன் நிர்வாக காலத்தில், ஹராப்பான் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வளர்களின் முக்கிய விமர்சனங்களில் ஒன்றாக இந்தச் சட்டம் ஆனது.