சாபா அம்னோவின் நான்கு எம்பிகள் கட்சியிலிருந்து விலகுவார்கள்

சாபாவில் அம்னோ எம்பிகள் நால்வர் இன்று அக்கட்சியிலிருந்து விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியிலிருந்து வெளியேறும் அவர்கள் கூட்டரசு அரசாங்கத்தை ஆதரிக்கும் சுயேச்சை எம்பிகளாகச் செயல்படுவார்கள்.

மலேசியன் இன்சைட் , இன்று அம்னோ சாபா கலைக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

“தடை ஏதுமில்லாதிருந்தால், அது இன்று கலைக்கப்படும்”, என்று அது கூறிற்று.

கூடாட் எம்பி அப்ட் ரஹிம் பக்ரி, பியுவோர்ட் எம்பி அசிசா முகம்மட் டுன், லிபாரான் எம்பி சக்கரியா முகம்மட் இட்ரிஸ், பெலூரான் எம்பி ரோனால்ட் கியாண்டி ஆகியோரே அம்னோவிலிருந்து வெளியேறும் அந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று நம்பப்படுகிறது.

கியாண்டி பொதுக் கணக்குக் குழுத் தலைவராகவும் உள்ளார்.

இறுதியில் கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ரடின் மட்டும்தான் சாபா அம்னோவில் எஞ்சியிருப்பார் என்று தெரிகிறது.

14வது பொதுத் தேர்தலில் சாபா அம்னோ அங்குள்ள 28 நாடாளுமன்ற இடங்களில் எட்டை வென்றது.

ஆனால், கிமானிஸ் எம்பி அனிபா அமானும் லாபுவான் எம்பி ரோஸ்மான் இஸ்லியும் முறையே செப்டம்பரிலும் அக்டோபரிலும் கட்சியிலிருந்து வெளியேறினர்.