1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தம், நஜிப் குற்றச்சாட்டை மறுத்தார்

இன்று காலை, செஷன்ஸ் நீதிமன்றத்தில், தேசியப் பொது கணக்குக் குழுவிடம் (பிஏசி) தாக்கல் செய்யும் முன்னர், தனக்கு சாதகமாக அமையும் வகையில், 1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள் செய்ய, மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தபோது, தனது பதவியைப் பயன்படுத்தி கட்டளையிட்டார் எனும் குற்றச்சாட்டை, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மறுத்தார்.

நஜிப், 65, நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில், தனக்கெதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அதனை மறுத்தார்.

அந்தப் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர், பிப்ரவரி 22 மற்றும் 26, 2016-க்கு இடைப்பட்ட காலத்தில், புத்ராஜெயா, மத்திய அரசு நிர்வாக மையத்தில் உள்ள பிரதமர் துறை வளாகத்தில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாக கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 2009-இன் பிரிவு 28 (1) (சி) பிரிவு, அதே சட்டப் பிரிவு 23 (1) மற்றும் பிரிவு 24 (1) கீழ், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்; இலஞ்சம் பணமாக இருப்பின், அதன் மதிப்பீட்டில் 5 மடங்காக அல்லது RM10,000 என எது அதிகபட்சமோ அது தண்டனையாக வழங்கப்படும்.

RM500,000 மற்றும் ஒருவர் ஜாமினில் நஜிப்பை விடுவிக்க செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பெடரல் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கோபால் ஸ்ரீ ராம், மூத்தத் துணைப் பொது வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வேளை, நஜிப்பைப் பிரதிநிதித்து முகமட் ஷஃபீ அப்துல்லா தலைமையிலான வழக்கறிஞர் குழு ஆஜரானது.

  • பெர்னாமா